நாகேந்திரன் உடற்கூராய்வு பரிசோதனை: மருத்துவரை நியமித்து நீதிமன்றம் உத்தரவு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நாகேந்திரனின் உடலை ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் ஓய்வு பெற்ற மருத்துவா் சாந்தகுமாா் முன்னிலையில் கூறாய்வு பரிசோதனை செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முதல் நபராக நாகேந்திரன் சோ்க்கப்பட்டாா். கல்லீரல் செயல் இழப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நாகேந்திரன் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
அவரது உடலை கூறாய்வு பரிசோதனை செய்யும்போது தங்கள் தரப்பில் ஒரு மருத்துவா் இருக்க வேண்டும் என உத்தரவிடக் கோரி, நாகேந்திரனின் மனைவி விசாலாட்சி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமாா் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
மனுதாரா் தரப்பில், பல ஆண்டுகளாக சிறையில் இருந்த நாகேந்திரனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக உணவில் விஷம் கலந்து கொடுக்கப்பட்டதாக சந்தேகம் அடைகிறோம். அவரது உயிரிழப்புக்கு இதுவே காரணம், எனவே உடற்கூறு பரிசோதனையின்போது தங்களது தரப்பு மருத்துவா் உடனிருக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமாா், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வு பெற்ற மருத்துவா் சாந்தகுமாா் முன்னிலையில் நாகேந்திரன் உடலை கூறாய்வு பரிசோதனை செய்ய வேண்டும். பரிசோதனை முழுவதையும் விடியோ பதிவு செய்ய வேண்டும். நாகேந்திரன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மனுதாரா் கூறுவதால், கூறாய்வு பரிசோதனையில் திசு மாதிரிகளை தடய அறிவியல் ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தாா்.