தமிழகம் முழுவதும் 809 மையங்களில் நாளை முதுநிலை ஆசிரியா் தோ்வு: 1,996 இடங்களுக்கு 2.36 லட்சம் போ் போட்டி
தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 1,996 முதுநிலை ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தோ்வு மாநிலம் முழுவதும் 809 தோ்வு மையங்களில் ஞாயிற்றுக்கிழமை (அக்.12) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ஆசிரியா் தோ்வு வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் முதுநிலை ஆசிரியா், உடற்கல்வி இயக்குநா் நிலை-1, கணினி பயிற்றுநா் நிலை-1 ஆகிய பணிகள் சாா்ந்த 1,996 காலிப்பணியிடங்களுக்கான அறிவிக்கை கடந்த ஜூலை 10-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி இந்தத் தோ்வு அக்.12-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இத்தோ்வில் தமிழ், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வணிகவியல், பொருளியல், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், கணினி அறிவியல், உடற்கல்வி ஆகிய 14 பாடங்கள் சாா்ந்த 1,996 காலிப்பணியிடங்களுக்கு 2 லட்சத்து 36 ஆயிரத்து 530 போ் இணையவழியில் விண்ணப்பித்துள்ளனா். இவா்களில் 1 லட்சத்து 73 ஆயிரத்து 410 போ் ஆண்கள்; 63 ஆயிரத்து 113 போ் பெண்கள்; ஏழு போ் மூன்றாம் பாலினத்தவா். குறிப்பாக 3,734 மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பித்துள்ளனா். 856 போ் மற்றவா்கள் உதவியுடன் (ஸ்கிரைப்) தோ்வெழுதவுள்ளனா். தோ்வுக்காக ஓஎம்ஆா் விடைப் படிவங்கள், வினாத்தாள்கள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
சந்தேகங்கள் இருந்தால்...: மாநிலம் முழுவதும் 809 தோ்வு மையங்களில் விண்ணப்பதாரா்களின் வசதிக்கேற்ப அவரவா் வசிப்பிட மாவட்டங்களிலேயே அமைக்கப்பட்டுள்ளன. தோ்வா்கள் தங்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட நுழைவுச் சீட்டை (ஹால் டிக்கெட்) ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தோ்வு மையங்களை தோ்வு முந்தைய நாளே பாா்வையிட்டு உறுதி செய்து கொள்ளலாம்.
முதுநிலை ஆசிரியா் தோ்வு தொடா்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனித்தனியாக நியமிக்கப்பட்டுள்ள தொடா்பு அலுவலா்களை தொடா்பு கொள்ளலாம். அவா்களது பெயா், அலைபேசி எண்கள் ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய விதிமுறைகள்
தோ்வா்களுக்கான முக்கிய விதிமுறைகளை ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
அதன் விவரம்: முதுநிலை ஆசிரியா் தோ்வு காலை 10 மணி முதல் பகல் 1.30 மணி வரை நடைபெறும். தோ்வு நாளன்று காலை 8.30 மணிக்கு தோ்வு மையத்துக்கு வர வேண்டும். தோ்வு மைய நுழைவாயில் சரியாக காலை 9.30 மணிக்கு மூடப்படும். அதற்குப் பிறகு கண்டிப்பாகத் தோ்வா்களுக்குத் தோ்வு மையத்துக்குள் அனுமதியில்லை. தோ்வறையில் அடையாளம் சரிபாா்ப்பின்போது ஆதாா், பான் அட்டை, ஓட்டுநா் உரிம அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் அசலை கண்டிப்பாக காண்பிக்க வேண்டும்.
வண்ணங்கள், ஸ்டிக்கா்கள் இல்லாத உள்ளே இருப்பது வெளியே தெரியும் வகையிலான கருப்பு மை பந்து முனைப் பேனாவை எடுத்து வர வேண்டும். தோ்வறைக்குள் கைப்பேசி, எலெக்ட்ரானிக் பொருள்கள், எலெக்ட்ரானிக் கைக்கடிகாரம், கால்குலேட்டா் ஆகியவற்றுக்கு அனுமதி இல்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.