
காரில் சென்றுகொண்டிருந்த நகைக் கடை ஊழியர்கள் மீது மிளகாய் பொடி தூவி ரூ.10 கோடி மதிப்புள்ள தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், 9.9 கிலோ தங்கம்,சொகுசு கார், துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தில் தொடர்புடைய வட மாநிலத்தைச் சேர்ந்த கணவன், மனைவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து திருச்சி எஸ்.பி செல்வநாகரத்தினம் கூறுகையில், திருச்சி சமயபுரம் அருகே சென்னையை சேர்ந்த நகைக்கடை ஊழியர்கள் சென்ற காரை மறித்து, மிளகாய்பொடி தூவி ரூ.10 கோடி மதிப்புள்ள 10 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
இதுகுறித்து சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கார் ஓட்டுநர் பிரதீப்(வயது 24), அவருடைய நண்பர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அனுமன்ராம்(21), கைலாஷ்(20), வினோத் என்ற பன்னாராம்(31), முகமது சோகைல்(21), மனோகர்ராம்(27), மணீஸ்சிரோகி(19), மங்கிலால் கனாராம் (22) மற்றும் விக்ரம் ராம்நிவாஸ் ஜாட் (18) ஆகியோருடன் கூட்டு சேர்ந்து நகைகளைக் கொள்ளையடித்தது தெரியவந்தது.
மேலும் தங்க நகைகளுடன் மங்கிலால் கனாராம், விக்ரம் ராம்நிவாஸ் ஜாட் ஆகியோர் மும்பைக்கு தப்பிச் சென்றனர்.
பின்னர் இவர்களில் ஏழு பேரை தமிழக காவல்துறையினர் கைது செய்தனர். ராஜஸ்தானைச் சேர்ந்த இரண்டு பேரை மத்திய பிரதேச போலீசார் கைது செய்து நகை மற்றும் பணத்தை கைப்பற்றினர். பின்னர் வட மாநிலத்தைச் சேர்ந்த கணவன் மனைவி உள்பட மூன்று பேரை மேலும் போலீசார் கைது செய்தனர். ஆக மொத்தம் இந்த வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்று கைதான 12 பேரையும் எஸ் பி செல்வ நாகரத்தினம் காண்பித்தார். மேலும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட நகை மற்றும் பணம்,சொகுசு கார், துப்பாக்கி ஆகியவற்றை காண்பித்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.
பின்னர் செல்வ நாகரத்தினம் பேசுகையில், இதில் முக்கிய குற்றவாளி கார் ஓட்டுநர் பிரதீப்தான். இந்த வழக்கில் மொத்தம் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 9.9 கிலோ நகையை மீட்டுள்ளோம் அதேபோல பணத்தையும் மீட்டுள்ளோம். கொள்ளையடிக்கப்பட்டதில் 97 சதவீதம் நகை மற்றும் பணம் மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் மீது தமிழ்நாட்டில் வேறு வழக்குகள் இல்லை. ஆனால், ஐந்து பேர் மீது வட மாநிலங்களில் வழக்கு நிலுவையில் உள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.