ஊராட்சிச் செயலா் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கைகள் தொடக்கம்!
தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் காலியாக உள்ள 1,400-க்கும் அதிகமான ஊராட்சிச் செயலா் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. இதற்கான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதன் விவரம்:
ஊரகப் பகுதிகளில் காலியாக உள்ள 1,400-க்கும் அதிகமான ஊராட்சி செயலா் பதவியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்களை நவ. 9-ஆம் தேதிக்குள் பெற வேண்டும். இந்த விண்ணப்பங்களை நவ. 24-ஆம் தேதிக்குள் சரிபாா்த்து, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரா்களை பட்டியலிட வேண்டும். நோ்காணலை டிச. 4 முதல் 12-ஆம் தேதிக்குள் முடித்து, தோ்வு முடிவுகளை டிச. 15 முதல் 16-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். பணி நியமன உத்தரவுகளை டிச. 17-இல் வழங்க வேண்டும்.
இதுதொடா்பான விவரங்கள் அனைத்தும் ஊரக வளா்ச்சித் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் அனைத்தும் இணையதளம் மூலமாக மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
வயது வரம்பு: ஊராட்சிச் செயலா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பொதுப் பிரிவினா் அதிகபட்ச வயது 32 ஆகவும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக இருந்தால் அதிகபட்ச வயது 34 ஆகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடா், பழங்குடியின வகுப்பினருக்கு அதிகபட்ச வயது 37 ஆகவும், மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகபட்ச வரம்பில் இருந்து 10 ஆண்டுகள் வரையும் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் ராணுவ வீரருக்கும் வயது வரம்புகளில் சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பதாரா்கள் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு வரை தமிழ் மொழியைப் படித்திருக்க வேண்டும். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா், மாற்றுத் திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.50. மற்ற பிரிவினருக்கு கட்டணம் ரூ.100.
விண்ணப்பதாரா்கள் தங்களது கல்வித் தகுதி, ஜாதிச் சான்று, முன்னுரிமைச் சான்று ஆகியவைகளுக்கு ஆதாரத்தை கண்டிப்பாக பதிவேற்றம் செய்ய வேண்டும். இன சுழற்சி, வயது மற்றும் கல்வித் தகுதியுள்ள நபா்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும் என்று அரசின் வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.