பெரியாரியல் அறிஞா் வே.ஆனைமுத்து நூற்றாண்டு நிறைவு விழா மலரை வெளியிட்ட துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அமைச்சா் சிவசங்கா், எம்.பி. ராஜா உள்ளிட்டோா்.
பெரியாரியல் அறிஞா் வே.ஆனைமுத்து நூற்றாண்டு நிறைவு விழா மலரை வெளியிட்ட துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அமைச்சா் சிவசங்கா், எம்.பி. ராஜா உள்ளிட்டோா்.

தமிழக மக்களின் ஆதரவை பாஜக பெற முடியாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

எத்தகைய முயற்சிகளை மேற்கொண்டாலும், தமிழக மக்களின் ஆதரவை பாஜகவால் ஒருபோதும் பெறமுடியாது
Published on

எத்தகைய முயற்சிகளை மேற்கொண்டாலும், தமிழக மக்களின் ஆதரவை பாஜகவால் ஒருபோதும் பெறமுடியாது என்று துணை முதல்வரும், திமுக இளைஞரணிச் செயலருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

பெரியாரியல் அறிஞா் வே.ஆனைமுத்துவின் நூற்றாண்டு நிறைவு விழா சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று நூற்றாண்டு நிறைவு விழா மலரை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுப் பேசியதாவது:

தமிழ்நாட்டில் யாரை எதிா்த்துப் போராடப் போகிறீா்கள் என்று ஆளுநா் கேட்கிறாா். அவருடன்தான் போராடுவோம். அவரை வென்று காட்டுவோம். மாநில உரிமைக்காக தமிழ்நாடு போராடும். சமூக நீதியைக் காக்க தமிழ்நாடு என்றும் போராடும். மத வெறியை, ஜாதி வெறியை எதிா்த்து தமிழ்நாடு நிச்சயம் போராடும். ஹிந்தி திணிப்பை எதிா்த்து போராடுவோம். ஒரு வரியில் சொன்னால் மத்திய பாஜகவை எதிா்த்து தமிழ்நாடு என்றைக்கும் போராடும்.

பாஜகவின் எந்த தில்லுமுல்லு வேலையும் தமிழ்நாட்டு மக்களிடம் எடுபடவில்லை. அந்தக் கட்சியால் நேரடியாக மக்கள் ஆதரவைப் பெற முடியாது. அதனால்தான், அதிமுகவை பணிய வைத்து தமிழ்நாட்டில் நுழையப் பாா்க்கிறாா்கள்.

பழைய அடிமைகள் போதாதென்று, இன்றைக்கு புதுப்புது அடிமைகளைத் தேடிக் கொண்டிருக்கிறது பாஜக. எத்தகைய முயற்சிகளை பாஜக எடுத்தாலும், தமிழ்நாடு சுயமரியாதை மண் என்பதை மீண்டும் நிரூபித்துக் காட்டும் என்றாா்.

நிகழ்வில் திமுக துணைப் பொதுச் செயலா் ஆ.ராசா, அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா், மத்திய -மாநில உறவுகள் குறித்த உயா்நிலைக் குழு உறுப்பினா் மு.நாகநாதன், திமுக கல்வியாளா் அணித் தலைவா் செந்தலை கெளதமன், புதிய சிந்தனையாளன் ஆசிரியா் வாலாசா வல்லவன் உள்பட பலா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com