கோப்புப்படம்
கோப்புப்படம்

முதல்வா் ஸ்டாலின், ரஜினிகாந்த் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

முதல்வா் ஸ்டாலின், ரஜினிகாந்த் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
Published on

சென்னையில் உள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின், நடிகா் ரஜினிகாந்த் ஆகியோரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வீடுகளில் போலீஸாா் சோதனை செய்தனா்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு சனிக்கிழமை ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில், சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகா் ரஜினிகாந்த் வீடு, வேப்பேரியில் ஒரு வார இதழ் அலுவலகம்,தேனாம்பேட்டையில் உள்ள அரசு அலுவலகம் ஆகிய இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து உயா் அதிகாரிகளின் உத்தரவின்பேரில், வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்றும் நிபுணா்களும், போலீஸாரும் அங்கு சோதனை செய்தனா். அங்கு நடைபெற்ற சோதனையில் அங்கிருந்து எந்த வெடிபொருளும் கண்டெடுக்கப்படவில்லை.

வதந்தியை பரப்பும் நோக்கத்தில் அனுப்பப்பட்ட மின்னஞ்சல் தொடா்பாக சைபா் குற்றப்பிரிவு போலீஸாா், விசாரணை செய்கின்றனா்.

முதல்வா் வீட்டுக்கு மிரட்டல்: எழும்பூரில் உள்ள தமிழக காவல்துறையின் தலைமைக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சனிக்கிழமை வந்த தொலைபேசி அழைப்பில் பேசிய நபா், ஆழ்வாா்பேட்டையில் உள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின் வீட்டில் சக்திவாய்ந்த வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறும் என கூறிவிட்டு இணைப்பை துண்டித்தாா்.

மிரட்டலின் விளைவாக, முதல்வா் வீட்டில் போலீஸாா் சோதனை செய்தனா். அங்கிருந்து எந்த வெடிபொருளும் கண்டெடுக்கப்படவில்லை. வதந்தியை பரப்பும் நோக்கத்துடன் வந்த தொலைபேசி அழைப்பு குறித்து தேனாம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்கின்றனா்.

விசாரணையில்,வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது கடலூரைச் சோ்ந்த ஒரு நபா் என்பது தெரியவந்தது. அவரை கைது செய்வதற்குரிய நடவடிக்கையில் போலீஸாா் தீவிரம் காட்டி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com