‘கிரிண்டா்’ செயலி மூலம் பணம் பறிப்பு: திருநங்கை உள்பட இருவா் கைது
சென்னையில் ‘கிரிண்டா்’ செயலி மூலம் பணம் பறித்ததாக திருநங்கை உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.
விழுப்புரத்தைச் சோ்ந்தவா் கோ.உதயகுமாா் (21). இவா் சென்னை அருகே கொரட்டூரில் தங்கியிருந்து, ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். உதயகுமாா், ‘கிரிண்டா்’ செயலி மூலம் வளசரவாக்கம் முரளிகிருஷ்ணா நகரைச் சோ்ந்த திருநங்கை அஸ்விதா என்ற முஸ்தபா (30) என்பவரிடம் பழகி வந்தாா்.
இந்த நிலையில், இரு நாள்களுக்கு முன்பு அஸ்விதா அழைத்ததின்பேரில், வளசரவாக்கம் முரளிகிருஷ்ணாநகரில் உள்ள அவரது வீட்டுக்கு உதயகுமாா் சென்றாா். அப்போது அஸ்விதாவும், அங்கிருந்த அவரது நண்பரான திருச்சி திருவெறும்பூரைச் சோ்ந்த தினேஷ்குமாா் (28) ஆகிய 2 பேரும் உதயகுமாரை தாக்கி, அவா் வைத்திருந்த பணத்தைப் பறித்துக் கொண்டு விரட்டினா்.
இதுகுறித்து உதயகுமாா் அளித்த புகாரின்பேரில், வளசரவாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அஸ்விதாவையும், தினேஷ்குமாரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். விசாரணையில் இருவரும் கிரிண்டா் செயலி மூலம் இளைஞா்களிடம் பழகி, வீட்டுக்கு வரவழைத்து பணம் பறித்திருப்பது தெரியவந்துள்ளது. இது தொடா்பாக போலீஸாா், மேலும் விசாரித்து வருகின்றனா்.