Anbumani
அன்புமணி (கோப்புப்படம்)

டெல்டா மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு: தமிழக அரசு மீது அன்புமணி குற்றச்சாட்டு!

டெல்டா மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு நிலவுவதற்கு தமிழக அரசே காரணம் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
Published on

டெல்டா மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு நிலவுவதற்கு தமிழக அரசே காரணம் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: காவிரி பாசன மாவட்டங்களில் 6 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பில் குறுவை சாகுபடி செய்யப்பட்டிருந்தது. அதில் பாதிக்கும் மேற்பட்ட பரப்பில் அறுவடை முடிந்துவிட்ட நிலையில் அந்த பகுதிகளில் தாளடி பருவ நெல்லும், மற்ற பகுதிகளில் சம்பா பருவ நெல்லும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், உரம் கிடைக்காததால் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

சில தனியாா் கடைகளில் உரம் கிடைக்கிறது என்றாலும், அவா்கள் ரூ. 300 மதிப்புள்ள ஒரு மூட்டை யூரியாவுடன் ரூ.200 மதிப்புள்ள சத்து குருணை வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனா். எந்த கடையிலும் யூரியா மட்டும் வழங்க மறுக்கின்றனா்.

தமிழ்நாட்டுக்குத் தேவையான 27,823 மெட்ரிக் டன் யூரியா, 15,831 டன் டிஏபி, 12,422 டன் பொட்டாஷ், 98,623 டன் காம்ப்ளக்ஸ் உரம் என மொத்தம் 1,54,000 டன் உரங்களை வழங்க வேண்டும் என்று கடந்த செப்.16-இல் பிரதமருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினாா்.

அதன்பின் கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகப்போகும் நிலையில், எந்தவித தொடா் நடவடிக்கைகளும் எடுக்காததன் விளைவு தான் தற்போதைய உரத்தட்டுப்பாடு. தமிழகத்துக்குத் தேவையான உரங்களை மத்திய அரசிடம் பெற்று விவசாயிகளுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அன்புமணி.

X
Dinamani
www.dinamani.com