போலியோ முகாம்: 7.82 லட்சம் 
குழந்தைகளுக்கு சொட்டு மருந்து!

போலியோ முகாம்: 7.82 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமில் 7.82 லட்சம் குழந்தைகள் பயனடைந்துள்ளனர்.
Published on

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமில் 7.82 லட்சம் குழந்தைகள் பயனடைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: செங்கல்பட்டு, மயிலாடுதுறை, சிவகங்கை, தஞ்சாவூா், திருநெல்வேலி மற்றும் விருதுநகா் ஆகிய 6 மாவட்டங்களில் மொத்தம் 7,091 மையங்களில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் நடைபெற்ற அந்த முகாமில் 5 வயதுக்குள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டது. அதன்வாயிலாக மொத்தம் 7,82,709 (99.32 சதவீதம்) குழந்தைகள் பயனடைந்துள்ளன.

குறிப்பாக, செங்கல்பட்டில் 2,31,281 குழந்தைகள், மயிலாடுதுறையில் 62,363 குழந்தைகள், சிவகங்கையில் 1,01,995 குழந்தைகள், தஞ்சாவூரில் 1,59,388 குழந்தைகள், திருநெல்வேலியில் 1,11,796 குழந்தைகள், விருதுநகரில் 1,15,886 குழந்தைகள் சொட்டு மருந்து முகாம் மூலம் பயனைடந்துள்ளனா்.

இந்தப் பணிகளில் 27,000-க்கும் மேற்பட்ட சுகாதார பணியாளா்கள், அங்கன்வாடிப் பணியாளா்கள், ஆசிரியா்கள், தன்னாா்வலா்கள் ஈடுபடுத்தப்பட்டனா். முன்னதாக, தாம்பரம், திருநீா்மலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஆகியோா் சொட்டு மருந்து முகாமைத் தொடக்கி வைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com