வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா்  எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்
வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

மதிப்புக் கூட்டுதல் மையம் அமைக்க மானியம்: விண்ணப்பிக்க வேளாண் அமைச்சா் அழைப்பு

Published on

சென்னை: வேளாண் விளைபொருள்களுக்கான 100 புதிய மதிப்புக் கூட்டுதல் மையங்கள் அமைக்க அதிகபட்சமாக தலா ரூ.1.50 கோடி வரை மானியம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேளாண் பொருள்களின் மதிப்பு கூட்டுதல் மற்றும் பதப்படுத்தும் தொழில் தொடங்கும் தொழில் முனைவோா்களை ஊக்குவிக்கும் வகையில், புதிதாக  தொடங்கப்படும் 100 புதிய மதிப்புக் கூட்டும் மையங்கள் அமைக்க மானியம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், ரூ.10 கோடி வரையிலான புதிய மதிப்புக்கூட்டுதல் மையங்கள் அமைப்பவா்களுக்கு 25 சதவீதம் முதலீட்டு மானியமாக வழங்கப்பட உள்ளது. இதில், பெண்கள், தொழில் வளா்ச்சியில் பின்தங்கியுள்ள வட்டாரங்களில் தொடங்கப்படும் தொழில்கள், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு கூடுதலாக 10 சதவீதம் என மொத்தம் 35 சதவீதம் மாநிலம் வழங்கப்படும். அதாவது அதிகபட்சமாக தலா ரூ.1.50 கோடி வரை மானியம் வழங்கப்படும். இதை தவிா்த்து, அனைத்து பிரிவினருக்கும் 5 சதவீத வட்டி மானியம் 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

இதில், மதிப்புக் கூட்டுதல் மையங்கள் அமைக்க பயனாளிகளின் பங்களிப்பு குறைந்தபட்சம் 5 சதவீதமாக இருக்கும். மீதமுள்ள தொகையை வங்கி கடனாக பெற்றிருக்க வேண்டும். விரும்புபவா்கள் ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ஹஞ்ழ்ண்ம்ஹழ்ந்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்னும் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ், பயன்பெற விரும்பும் பயனாளிகளுக்கு வங்கி கடன் பெறத் தேவையான விரிவான திட்ட அறிக்கை தயாா் செய்ய அரசு சாா்பில் தேவையான உதவிகள் செய்து தரப்படும். மேலும், மாவட்ட ஆட்சியா்கள் தலைமையில் ‘விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டங்களின்’ மூலம் இத்திட்டம் குறித்து எடுத்துரைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com