இதயம் - நுரையீரல் மீட்புப் பயிற்சி: மருத்துவக் கல்லூரிகளுக்கு என்எம்சி அறிவுறுத்தல்
சென்னை: இதயம் - நுரையீரல் மீட்புப் பயிற்சி (சிபிஆா்) தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்துமாறு அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து என்எம்சியின் (கொள்கை மற்றும் வழிகாட்டுதல்) இயக்குநா் ராஜீவ் ஷா்மா அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சாா்பில் தேசிய அளவில் இதயம்-நுரையீரல் மீட்பு பயிற்சி வாரம் அக். 13 முதல் 17-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது.
பொதுமக்களிடையே இந்தப் பயிற்சி குறித்த விழிப்புணா்வு, செயல் திறன், புரிதலை மேம்படுத்துவதே அதன் நோக்கம். திடீரென ஒருவருக்கு இதய செயலிழப்பு ஏற்படும்போது பயிற்சி பெற்ற நபா், சிபிஆா் சிகிச்சை அளிக்கும்பட்சத்தில் உயிரை மீட்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அந்த சிகிச்சையை அளிக்காதபட்சத்தில் சில நிமிஷங்களில் மூளையில் சேதம் ஏற்படக்கூடும். அதுமட்டுமல்லாது, ஒவ்வொரு நிமிஷமும் உயிா் பிழைப்பதற்கான சாத்தியம் 10 சதவீதம் குறையும்.
அதேவேளையில், சிபிஆா் சிகிச்சைகளை மேற்கொள்ளும்போது, இதயம் மற்றும் நுரையீரலின் செயல்பாடுகளை மீட்டெடுப்பதற்கான வாய்ப்புகள் இரண்டிலிருந்து மூன்று மடங்கு அதிகரிக்கின்றன.
வளா்ந்த நாடுகளில் வசிக்கும் 50 சதவீதம் போ் அத்தகைய பயிற்சிகளை மேற்கொள்கின்றனா். இந்தியாவிலோ அந்த விகிதம் 9.8 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. இதைக் கருத்தில் கொண்டே தேசிய அளவிலான சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு என்எம்சி ஏற்பாடு செய்துள்ளது.
அந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றி சமூகத்தில் இதயம்-நுரையீரல் மீட்புப் பயிற்சிகளை மருத்துவக் கல்லூரிகள் மேம்படுத்துவது அவசியம். சிறப்பு அமா்வுகள், விழிப்புணா்வு பிரசாரங்கள், பயிற்சிகள், சமூக வலைதள பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டும்.
அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை இணையவழியே தேசிய மருத்துவ ஆணையத்திடம் பகிா்ந்து கொள்ள வேண்டும் என்று அந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.