
புது தில்லி: கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய்யின் தேர்தல் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி கண்காணிப்பின் கீழ் சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, விசாரணை எல்லையைத் தாண்டி சிறப்பு விசாரணைக் குழு அமைத்ததற்கு உச்சநீதிமன்றம் கடும் ஆட்சேபம் தெரிவித்தது.
மேலும், தமிழக அரசு அமைத்த ஒருநபர் ஆணையம், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட சிறப்பு விசாரணைக் குழு ஆகியவை ரத்து செய்யப்படுவதாகவும் உச்சநீதிமன்றம் அறிவித்தது.
கரூர் சம்பவத்துக்கு நீதிபதி கண்காணிப்பில் சுதந்திரமான விசாரணை கோரி தவெகவும், சிபிஐ விசாரணை கோரி பாதிக்கப்பட்டவர்கள் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை வெள்ளிக்கிழமை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி, என்.பி. அஞ்சாரியா அமர்வு திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவின் விவரம்:
கரூர் சம்பவம் மதுரை விசாரணை வரம்புக்குள் இருக்கக்கூடிய நிலையில், எவ்வாறு சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்தது? சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி எப்படி தன்னிச்சையாக இவ்வாறு ஓர் உத்தரவை பிறப்பிக்க முடியும்? தேர்தல் பிரசார நடைமுறைகளை வகுப்பதற்காக தொடுக்கப்பட்ட வழக்கில் எவ்வாறு இப்படி ஓர் உத்தரவை பிறப்பிக்க முடியும்?
மனுக்களில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளைத் தாண்டி, சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து எப்படி உத்தரவிட்டார் என்பது தெரியவில்லை.
தவெகவையும், அக்கட்சி உறுப்பினர்களையும் வழக்கில் இணைக்காதபோதும், அவர்களின் வாதங்களைக் கேட்காதபோதும் அவர்களுக்கு எதிராக எப்படி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவிக்க முடியும்?
தமிழக அரசின் வழக்குரைஞர் முன்வைத்த கோரிக்கைகளையே சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவாகப் பிறப்பித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற அமர்வு தேர்தல் பிரசார வழிமுறைகளை வகுக்கக் கோரிய இந்த விவகாரத்தை, ரிட் கிரிமினல் வழக்காக எவ்வாறு பதிவு செய்தது என்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் விளக்கம் அளிக்க வேண்டும்.
மக்களின் அடிப்படை உரிமை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தேசிய அளவில் மக்களின் மனசாட்சியை உலுக்கியதால், இதை மக்களின் அடிப்படை உரிமைகள் சார்ந்த விவகாரமாகக் கருதுகிறோம். எனவே, கரூர் சம்பவத்தில் ஒரு நியாயமான விசாரணையை எதிர்பார்க்கிறோம்.
காவல் துறை உயர் அதிகாரிகள் ஊடகங்களில் தெரிவித்த கருத்து மக்கள் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடும். விசாரணை மீது பொதுமக்களின் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.
உண்மைகளைப் பார்க்கும்போது, இந்தப் பிரச்னை நாடு முழுவதும் குடிமக்களின் அடிப்படை உரிமைகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
நேர்மையான விசாரணை என்பது மக்களின் அடிப்படை உரிமையாகும். ஆகையால், பாரபட்சமற்ற, சுதந்திரமான விசாரணைக்காக இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்.
தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும்: தமிழக முதல்வரால் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம் இதுவரையில் சேகரித்த ஆதாரங்கள், ஆவணங்கள், முதல் தகவல் அறிக்கை, விசாரணை முன்னேற்ற அறிக்கை (எண்ம ஆவணம்) உள்ளிட்ட எந்த ஆதாரமாக இருந்தாலும் அதை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்.
சிறப்பு விசாரணைக் குழு, ஒரு நபர் ஆணையம் ஆகியவற்றின் செயல்பாடு ரத்து செய்யப்படுகிறது. தமிழக அரசு அனைத்து வகையான ஒத்துழைப்பையும் சிபிஐக்கு வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்தனர்.
ஓய்வு பெற்ற நீதிபதி கண்காணிப்பில் விசாரணை
கரூர் நெரிசல் சம்பவத்தின் சிபிஐ விசாரணையை உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி (படம்) தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு கண்காணிப்பில் நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது.
மேலும், "கண்காணிப்புக் குழுவில் இடம்பெறும் இரு ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடாது. ஆனால், தமிழக பிரிவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். சிபிஐ சேகரித்த ஆதாரங்களை கண்காணிப்புக் குழு ஆய்வு செய்து விசாரணையை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த விசாரணை சுதந்திரமாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் இருக்க வேண்டும்.
கண்காணிப்புக் குழு முதல் கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும். சிபிஐ அதிகாரிகள் விசாரணையின் மாத அறிக்கையை கண்காணிப்புக் குழுவிடம் தாக்கல் செய்ய வேண்டும். இந்த அறிக்கை உச்சநீதிமன்றத்திலும் தேவைப்படும்போது தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.