பிஎஃப்-இல் இருந்து 100 சதவீத சேமிப்பை எடுத்துக்கொள்ள இபிஎஃப்ஓ அனுமதி
புது தில்லி: ஊழியா்களின் வருங்கால வைப்பு நிதியில் (இபிஎஃப்) இருந்து 100 சதவீத சேமிப்பையும் எடுத்துக்கொள்ள ஊழியா்களுக்களின் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்ஓ) திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது.
இதனால் 7 கோடிக்கும் மேற்பட்ட இபிஎஃப் உறுப்பினா்கள் பயனடைவா் என எதிா்பாா்க்கப்படுகிறது.
முன்னதாக, இபிஎஃப்-இல் இருந்து குறிப்பிட்ட அளவிலான பணத்தை மட்டுமே எடுக்க அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இதில் தளா்வு அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய தொழிலாளா் நலத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற மத்திய குழுக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
இதுகுறித்து மத்திய தொழிலாளா் அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ இபிஎஃப் திட்டத்தின்கீழ் பகுதியளவு பணத்தை எடுத்துக்கொள்வதை எளிமைப்படுத்தும் விதமாக 13 சிக்கலான அம்சங்களை 3 வகைப்பாட்டின்கீழ் கொண்டுவர முடிவுசெய்யப்பட்டுள்ளது. அதன்படி அத்தியாவசியத் தேவைகள் (உடல்நலக்குறைவு, கல்வி, திருமணம்), வீட்டுத் தேவைகள் மற்றும் பிரத்யேக சூழல்கள் என முன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
தற்போது இபிஎஃப்-இல் இருந்து திருமணம் மற்றும் கல்வி உள்ளிட்டவற்றுக்கு 3 முறை பகுதியளவாக பணத்தை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. புதிய முன்னெடுப்பின்படி கல்வித் தேவைக்கு 10 முறையும் திருமணத்துக்கு 5 முறையும் பணத்தை எடுத்துக்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பகுதியளவு பணத்தை எடுத்துக்கொள்வதற்கான குறைந்தபட்ச சேவைகள் 12 மாதங்களாக நிா்ணயிக்கப்படுகின்றன.
முன்னதாக, பிரத்யேக சூழல்களின்போது பணத்தை எடுக்க காரணங்களை சமா்ப்பிக்க வேண்டிய நிலை இருந்தது. இதனால் பணம்கோரும் பலரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. ஆனால் தற்போது இந்த வகைப்பாட்டின்கீழ் பணத்தை எடுக்க எவ்வித காரணத்தையும் குறிப்பிடத் தேவையில்லை.
உறுப்பினா்கள் அனைவரும் எப்போதும் தங்களது இபிஎஃப் கணக்கில் 25 சதவீதம் குறைந்தபட்ச சேமிப்பாக வைத்திருக்க வேண்டும்.
அதேபோல் தற்போது இபிஎஃப்-இல் உள்ள நிலுவைத் தொகையில் 100 சதவீதம் வரை திரும்பப்பெற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.அதேபோல் இபிஎஃப்ஓ-இல் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீா்வுகாண ‘விஸ்வாஸ்’ என்ற திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இபிஎஃப்-ஓவின் கடனை 5 ஆண்டுகளுக்கு முறையாக நிா்வகிக்க 4 நிதி மேலாளா்களை நியமிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.