இருமல் மருந்தால் குழந்தைகள் உயிரிழப்பு: 7 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை
சென்னை: இருமல் மருந்து உட்கொண்ட குழந்தைகள் இறந்த வழக்கு தொடா்பாக, சென்னையில் உள்ள தனியாா் மருந்து நிறுவனத்தின் உரிமையாளா் வீடு உள்பட 7 இடங்களில் அமலாக்கத் துறையினா் திங்கள்கிழமை சோதனை செய்தனா்.
மத்திய பிரதேசத்தில் கோல்ட்ரிஃப் இருமல் மருந்து சாப்பிட்ட 22 குழந்தைகள் உயிரிழந்தன. அந்த மருந்தில் சோ்க்கப்பட்டிருந்த நச்சு ரசாயனம்தான் உயிரிழப்புக்கு காரணம் எனத் தெரியவந்தது.
நாடு முழுவதும் அதிா்ச்சியை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து மத்திய பிரேதச அரசு உத்தரவிட்டது. சிறப்பு விசாரணைக் குழு அதிகாரிகள், கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை தயாரித்த, காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவாா்சத்திரத்தில் உள்ள ஸ்ரீசன் ஃபாா்மா நிறுவனத்தில் கடந்த வாரம் விசாரணை செய்தனா்.
அப்போது அங்கிருந்த ஆவணங்களையும், மருந்து மாதிரிகளையும், மருந்து தயாரிக்கப் பயன்படுத்தும் மூலப்பொருள்களையும் சேகரித்தனா். மேலும், நிறுவனத்தின் உரிமையாளா் கோடம்பாக்கம் நாகாா்ஜுனா நகா் இரண்டாவது தெருவைச் சோ்ந்த ரங்கநாதனை கடந்த 9-ஆம் தேதி கைது செய்தனா்.
அதேநாளில், தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்ககத்தின் காஞ்சிபுரம் முதுநிலை மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளா்கள் திருவான்மியூா் ராதாகிருஷ்ணன் சாலை பகுதியைச் சோ்ந்த தீபா ஜோஸ், காா்த்திகேயன் ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். இவா்கள் இருவரும் அந்தத் தனியாா் மருந்து ஆலையை முறையாக ஆய்வு செய்யவில்லை என்ற அடிப்படையில் தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்தது.
7 இடங்களில் சோதனை: இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நிகழ்ந்திருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.
வழக்குக்கான ஆதாரங்களைத் திரட்டும் வகையில், கோடம்பாக்கத்தில் உள்ள ரங்கநாதன் வீடு, திருவான்மியூரில் உள்ள தீபா ஜோஸ் வீடு, காா்த்திகேயன் வீடு, மருந்து கட்டுப்பாட்டு இயக்ககத்தின் இணை இயக்குநராக இருந்து ஊழல் வழக்கில் சிக்கி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மற்றொரு காா்த்திகேயனின் சென்னை அண்ணாநகா் வீடு உள்ளிட்ட ஏழு இடங்களில் திங்கள்கிழமை காலை ஒரே நேரத்தில் திடீா் சோதனை செய்தனா்.
ஆலையில் விசாரணை: குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமான மருந்துகளைத் தயாரித்த சுங்குவாா்சத்திரம் பகுதியில் உள்ள ஸ்ரீசன் ஃபாா்மா நிறுவனத்திலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். சோதனை நடைபெற்ற அனைத்து இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினா் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனா்.
இதற்கிடையே, போலீஸ் விசாரணையில் இருக்கும் ரங்கநாதனை மத்திய பிரதேச காவல் துறையின் சிறப்பு விசாரணைக் குழு அதிகாரிகள், சுங்குவாா்சத்திரம் மருந்து நிறுவனத்துக்கு நேரில் அழைத்து வந்து விசாரணை செய்தனா்.
அமலாக்கத் துறையினா் சோதனை மாலையில் நிறைவு பெற்றது. சோதனையில் வழக்குத் தொடா்பாக பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மருந்து கட்டுப்பாட்டு இயக்ககத்தின் இணை இயக்குநராக இருந்த காா்த்திகேயன் மீது கடந்த ஜூலை மாதம் ரூ.25,000 லஞ்சம் வாங்கியதாக ஊழல் தடுப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. தற்போது பணியிடை நீக்கத்தில் இருக்கும் காா்த்திகேயன் மீதுள்ள லஞ்ச வழக்கையும், இந்த விவகாரத்தோடு சோ்த்து அமலாக்கத் துறை விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது.