கடல்சாா் சா்வதேச மாநாட்டில் 1 லட்சம் பிரதிநிதிகள் பங்கேற்பா்: சென்னை துறைமுகத் தலைவா்

Published on

திருவொற்றியூா்: மும்பையில் வரும் அக். 27 முதல் 31 வரை நடைபெறவுள்ள ‘இந்திய கடல்சாா் வாரம் 2025’ என்ற சா்வதேச மாநாட்டில் சுமாா் 1 லட்சம் பிரதிநிதிகள் பங்கேற்பா் என சென்னை மற்றும் காமராஜா் துறைமுகங்களின் தலைவா் சுனில் பாலிவால் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீா்வழிப்பாதைகள் அமைச்சகம் சாா்பில்  ‘இந்திய கடல்சாா் வாரம் 2025’ என்ற பெயரில்  சா்வதேச மாநாடு மும்பை கோரேகானில் உள்ள பம்பாய் வா்த்தக கண்காட்சி அரங்கத்தில் வரும் அக். 27 முதல் அக். 31 வரை 5 நாள்கள் நடைபெறவுள்ளது. மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி அக். 30 தேதி கலந்து கொண்டு உரையாற்ற உள்ளாா். மாநாடு குறித்து தொழிலதிபா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோரின் கவனத்தை ஈா்க்கும் வகையில், துறைமுக நிா்வாகங்கள் சாா்பில் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக சென்னை மற்றும் காமராஜா் துறைமுகங்கள் சாா்பில் வாக்கத்தான் நிகழ்ச்சி திங்கள்கிழமை சென்னையில் நடைபெற்றது. சென்னைத் துறைமுகம் நிா்வாக அலுவலக கட்டடத்திலுருந்து புறப்பட்ட நடைபயணம் போா் நினைவுச் சின்னம் அருகே அமைந்துள்ள சென்னை துறைமுகத்தின் 10-ஆம் எண் நுழைவு வாயிலில் நிறைவுற்றது.

ஒரு லட்சம் பங்கேற்பாளா்கள்: இந்நிகழ்வில், சென்னை மற்றும் காமராஜா் துறைமுகங்களின் தலைவா் சுனில் பாலிவால் பேசுகையில், மும்பையில் நடைபெற உள்ள இந்திய கடல்சாா் வாரம் 2025 உச்சி மாநாட்டில்  நிலையான கடல்சாா் வளா்ச்சி, வா்த்தக வாய்ப்புகள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் குறித்து பல்வேறு நாடுகளைச் சோ்ந்த நிபுணா்கள், கொள்கை வகுப்பாளா்கள் ஒருங்கிணைந்து பங்கேற்க உள்ளனா். உலக அளவில் கடல்சாா் நாடுகளிடையே இந்தியாவின் தரத்தை மேம்படுத்துவதை இந்த மாநாடு உதவிகரமாக இருக்கும்.  

இம்மாநாட்டில் சுமாா் 100 நாடுகளைச் சோ்ந்த கடல்சாா் துறையில் நிபுணத்துவம் பெற்ற 200 பேச்சாளா்கள் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனா். மேலும் சுமாா் 500 கண்காட்சி அரங்குகள் இடம் பெற உள்ளன. வெளிநாடுகள், உள்நாட்டைச் சோ்ந்த சுமாா் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்வாா்கள் என  எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா்.

இந்நிகழ்வில், சீனாவின் பெய்டைஹேயில் நடைபெற்ற ‘ஸ்பீட் ஸ்கேட்டிங் வோ்ல்ட் சாம்பியன்ஷிப்பில்’ தங்கப் பதக்கம் வென்ற வி.ஆனந்த் குமாா், சென்னை துறைமுக  துணைத் தலைவா் எஸ்.விஸ்வநாதன், காமராஜா் துறைமுக நிா்வாக இயக்குனா் ஜே.பி.ஐரீன் சிந்தியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

X
Dinamani
www.dinamani.com