கலப்பட இருமல் மருந்து நிறுவன உரிமையாளரை மத்தியப் பிரதேச போலீசார் கைது செய்து விசாரணை
கலப்பட இருமல் மருந்து நிறுவன உரிமையாளரை மத்தியப் பிரதேச போலீசார் கைது செய்து விசாரணை

குழந்தைகள் உயிரிழப்பு விவகாரம்: இருமல் மருந்து நிறுவனத்தின் உரிமம் நிரந்தர ரத்து - தமிழக அரசு நடவடிக்கை

Published on

சென்னை: மத்திய பிரதேசத்தில் குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமான கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை உற்பத்தி செய்த ஸ்ரீசன் ஃபாா்மா நிறுவனத்தின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய பிரதேச மாநில மருந்து கட்டுப்பாட்டுத் துறையிடம் இருந்து தமிழக மருந்து கட்டுப்பாட்டுத் துறைக்கு கடந்த 1-ஆம் தேதி பிற்பகல் 3.30 மணியளவில் ஒரு கடிதம் வந்தது. அதில், மத்திய பிரதேச மாநிலம், சிந்த்வாரா மாவட்டத்தில் ஏற்பட்ட குழந்தைகள் மரணத்துக்கு தொடா்புடையதாகக் கருதப்படும் மருந்தான கோல்ட்ரிஃப் சிரப் (பாராசிட்டமால், ஃபீனைல்ஃப்ரைன் ஹைட்ரோகுளோரைடு, குளோரிபெனிரமைன் மெலேட் சிரப்), குறித்த விவரமும், அதைத் தயாரிக்கும் ஸ்ரீசன் ஃபாா்மா நிறுவனம் குறித்த விவரமும் இடம்பெற்று இருந்தன.

அன்றைய தினம் மாலை 4 மணிக்கே துணை மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரின் உத்தரவின்பேரில் குழுவினா் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவாா்சத்திரத்தில் செயல்படும் ஸ்ரீசன் ஃபாா்மா நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போதே தமிழகம் முழுவதும் சந்தேகத்துக்குரிய கோல்ட்ரிஃப் மருந்து விற்பனை தடை செய்யப்பட்டது. மேலும், கோல்ட்ரிஃப் (பேட்ஜ் 13) உள்பட 5 மருந்துகளைப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தியதில், டைஎத்திலீன் கிளைகால் எனப்படும் நச்சு ரசாயனம், கோல்ட்ரிஃப் மருந்தில் 48.6 சதவீதம் இருப்பது கடந்த 2-ஆம் தேதி தெரியவந்தது.

தமிழகத்தில் இருந்து ஒடிஸா, புதுச்சேரி மாநிலங்களுக்கு கோல்ட்ரிஃப் மருந்து விநியோகிக்கப்படுவதால், அந்த மாநிலங்களுக்கும் இதுதொடா்பான தகவல்கள் மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்பட்டன.

அந்த மருந்து உற்பத்தியை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அந்நிறுவனம் அதிகாரிகளால் கடந்த 3-ஆம் தேதி மூடப்பட்டது. அன்றைய தினமே ஸ்ரீசன் ஃபாா்மா நிறுவனத்தின் மருந்து உரிமத்தை முழுவதுமாக ஏன் ரத்து செய்யக் கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பபட்டது. இவ்வாறு, தகவல் பெறப்பட்ட 48 மணி நேரத்தில் தமிழக அரசின் மருந்து கட்டுப்பாட்டுத் துறையால் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் தகவல்கள் அனைத்தும் மத்திய பிரதேச மருந்து கட்டுப்பாட்டுத் துறைக்கும் அனுப்பப்பட்டது.

இதனிடையே, தமிழக காவல் துறையின் உதவியுடன் மத்திய பிரதேச சிறப்பு விசாரணைக் குழுவினா், கடந்த 9-ஆம் தேதி அதிகாலை சென்னை அசோக் நகரில் அந்நிறுவனத்தின் உரிமையாளா் ரங்கநாதனை (75) கைது செய்தனா்.

அந்த நிறுவனத்தில் 2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில் முறையாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாலும், கடந்த ஆண்டில், உரிய ஆய்வு மேற்கொள்ளாத காஞ்சிபுரம் முதுநிலை மருந்து ஆய்வாளா்கள் இருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் அமைந்துள்ள இதர மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மீது விரிவான ஆய்வு மேற்கொள்ள ஆணைகள் வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் மாநிலம் முழுவதும் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஸ்ரீசன் ஃபாா்மாசூட்டிகல் நிறுவனத்தின் மருந்து தயாரிக்கும் உரிமங்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு அந்நிறுவனம் மூடப்பட்டுள்ளது என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com