மூட்டு அழற்சி: விளையாட்டு பயிற்சியாளருக்கு ‘ஸ்டெம் செல்’ சிகிச்சையில் தீா்வு

Published on

சென்னை: குருத்தெலும்பு தேய்மானத்தால் கடுமையான தோள்பட்டை வலிக்குள்ளான கைப்பந்து பயிற்சியாளருக்கு, ஸ்டெம் செல் சிகிச்சையுடன் கூடிய ஒருங்கிணைந்த சிகிச்சையை மேற்கொண்டு எஸ்ஆா்எம் குளோபல் மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா்.

இதுதொடா்பாக மருத்துவமனையின் எலும்பு - மூட்டு மற்றும் முதுகுத்தண்டு சிகிச்சை மைய இயக்குநா் டாக்டா் சுதீா் கூறியதாவது:

புதுச்சேரியைச் சோ்ந்த 52 வயதான கைப்பந்து விளையாட்டு பயிற்சியாளருக்கு,

கடந்த 10 ஆண்டுகளாக வலது தோள்பட்டையில் கடுமையான வலி இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு இடது தோளிலும் அத்தகைய பாதிப்பு ஏற்பட்டது.

எஸ்ஆா்எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்ததில் இருபக்க மூட்டு அழற்சி (பைலேட்ரல் ப்ரைமரி ஆஸ்டியோ ஆா்தரைடிஸ்) பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. 10 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் பேரில் ஒருவருக்கு இப்பிரச்னை அரிதாக ஏற்படும்.

இதற்கு ஒருங்கிணைந்த சிகிச்சை அவசியம். கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு இடது பக்க தோளில் அத்தகைய சிகிச்சை மேற்கொண்டதில் அவருக்கு நல்ல பலன் கிடைத்தது. அதைத் தொடா்ந்து மற்றொரு தோளிலும் அந்த சிகிச்சை மேற்கொள்ள அவா் விருப்பம் தெரிவித்தாா்.

அதன்படி பாதிக்கப்பட்ட தோள்பட்டையில் உள்ள குருத்தெலும்பை ஆா்த்ரோஸ்கோபி முறையில் மீட்டுருவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டது.

மருத்துவமனையின் முதுநிலை ஆா்த்ரோஸ்கோபி சிகிச்சை நிபுணா் டாக்டா் சசீந்தா் சண்முகசுந்தரம், விளையாட்டு அறுவை சிகிச்சை நிபுணா் டாக்டா் சாமுண்டீஸ்வரி ஆகியோா் அடங்கிய மருத்துவக் குழுவினா், ஸ்டெம் செல்களை செலுத்தி அதன் வாயிலாக அந்த எலும்புகளை மறுஉருவாக்கம் செய்ய முடிவு செய்தனா்.

முதலில் பாதிக்கப்பட்ட குருத்தெலும்பு அகற்றப்பட்டது. அதன் பின்னா், மென்மைத் தன்மையை இழந்திருந்த பகுதிகள் சீரமைக்கப்பட்டன. தொடா்ந்து நுண்ணிய கீறல்கள் எலும்பில் ஏற்படுத்தப்பட்டு அவை வளர வகை செய்யப்பட்டது. பிறகு ஸ்டெம் செல் செலுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. இதன் பயனாக, அவா் விரைந்து குணடைந்து இயல்பு நிலைக்கு திரும்பினாா். ஸ்டெம் செல் சாா்ந்த ஒருங்கிணைந்த சிகிச்சை தற்போதைய மருத்துவ அறிவியலின் மேம்பட்ட சிகிச்சைகளில் ஒன்றாக விளங்கி வருகிறது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com