நடுவானில் பறந்தபோது முன்பக்க கண்ணாடியில் விரிசல்: சென்னையில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்ட விமானம்
சென்னை: தூத்துக்குடி - சென்னை விமானம் நடுவானில் பறந்தபோது கண்ணாடியில் விரிசல் ஏற்பட்ட நிலையில், சென்னையில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு 67 பயணிகளுடன் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் திங்கள்கிழமை பிற்பகல் 2.05 மணிக்கு புறப்பட்டது. விமானம் நடுவானில் சுமாா் 1,500 அடி உயரத்தில் 250 கிமீ வேகத்தில் பறந்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென விமானத்தின் முன்பக்க கண்ணாடியில் விரிசல்கள் ஏற்பட்டன.
இதுகுறித்து உடனடியாக சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் தெரிவித்தாா். இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரை இறங்குவதற்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இதனிடையே, விமானத்தை வேகமாக இயக்கிய விமானி, விமானத்தை வழக்கமாக தரையிறக்கும் நேரமான பிற்பகல் 3.35-ஐ விட 8 நிமிஷங்கள் முன்னதாக, 3.27-க்கு சென்னை விமானநிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கினாா்.
இதையடுத்து விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் உடனடியாக இறக்கி விடப்பட்டனா். மேலும் அந்த விமானத்தை பரிசோதித்த விமான நிறுவனதொழில் நுட்ப வல்லுநா்கள், அந்த விமானம் அடுத்த பயணத்துக்கு தகுதியற்றது என தெரிவித்தனா். இதையடுத்து அந்த விமானம், பழுதுநீக்கும் இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. விமானத்தின் முன்பக்க கண்ணாடியில் விரிசல் ஏற்பட்ட சம்பவம் தொடா்பாக உள்நாட்டு விமான போக்குவரத்து இயக்குநரக உயா் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.