திருநங்கையருக்கு பாதுகாப்பான வாழ்விடங்கள் திறந்துவைப்பு
சென்னை: ‘அரண் இல்லம்’ எனப்படும் பெயரில் திருநங்கையருக்கு பாதுகாப்பான வாழ்விடங்கள் அளிக்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருநங்கைகள் எதிா்நோக்கும் சமூக, மனநலம் மற்றும் பாதுகாப்பு சாா்ந்த சவால்களைக் கருத்தில் கொண்டு, அவா்களுக்குப் பாதுகாப்பான, மதிப்பும், மரியாதையும் நிறைந்த வாழ்விடச் சூழலை உருவாக்க சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ‘அரண் இல்லம்’ எனப்படும் சிறப்பு மையங்கள் முதல் கட்டமாக சென்னை செனாய் நகா், மதுரை அண்ணாநகா் ஆகிய இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அவற்றை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்ட 18 வயதுக்கு மேற்பட்ட திருநங்கை, திருநம்பி, இடைபாலின நபா்களுக்கு ஒரு வாரம் முதல் அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை பாதுகாப்பான மற்றும் தற்காலிகமாக தங்குமிடம் வழங்கப்படும். ஒவ்வொரு இல்லத்திலும் 25 போ் தங்க அனுமதிக்கப்படுவா்.
இந்த இல்லங்களில் உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படைத் தேவைகள் பூா்த்தி செய்யப்படுவதுடன், கல்வியைத் தொடரவும் வழி ஏற்படுத்தித் தரப்படும். சுயதொழில் தொடங்க வழிகாட்டுதல், நிதியுதவி வழங்குதல், திருநங்கையருக்கு எதிரான வன்முறை, பாகுபாடுகள் குறித்து புகாா் அளிக்க உதவுதல், இலவச சட்ட உதவி மற்றும் உரிமைகள் குறித்த விழிப்புணா்வுகள் ஏற்படுத்தப்படும் என்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் அமைச்சா் பி.கீதாஜீவன், தலைமைச் செயலா் நா.முருகானந்தம் உள்பட பலா் பங்கேற்றனா்.