
காஞ்சிபுரம்: நண்பரைக் கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2000 அபராதம் விதித்து காஞ்சிபுரம் மாவட்ட கூடுதல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த நண்பர்கள் சிலர் சினிமாவில் உதவி இயக்குநர்களாக வாய்ப்பு தேடி சென்னை ஐயப்பன் தாங்கல், சீனிவாசபுரம் பகுதியில் தனியார் குடியிருப்பில் தங்கி இருந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தனியார் குடியிருப்புப் பகுதியில் மது அருந்திவிட்டு கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
புத்தாண்டுகொண்டாட்டத்தின்போது நண்பர்களான மணிகண்டன் மற்றும் ரூத்ரன் ஆகிய இருவருக்கும் மது போதையில் வாய்த் தகராறு ஏற்பட்டு தகாத வார்த்தைகளால் மாறி மாறி பேசிக்கொண்டனர்.
தகாத வார்த்தையால் பேசியதால் ஆத்திரமடைந்த மணிகண்டன் சமையலறையில் இருந்த கத்தியைக் கொண்டு வந்து ருத்ரன் மார்பில் இதயப் பகுதியில் பலமாக குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ருத்ரன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து மாங்காடு போலீசார் வழக்குப் பதிவு செய்து கத்தியால் குத்திய மணிகண்டனை (வயது 30) கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையானது காஞ்சிபுரம் மாவட்ட கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் அரசு தரப்பில் கூடுதல் வழக்குரைஞர் சத்தியமூர்த்தி வாதாடி, மாங்காடு காவல் நிலைய போலீசார் உதவியுடன் சாட்சி ஆதாரங்களோடு கொலைக் குற்றத்தை நிரூபித்தார்.
இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.மோகனகுமாரி, நண்பனை குத்திக் கொலை செய்த குற்றவாளி மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராத தொகையை கட்டத் தவறினால் இரண்டு மாதம் கூடுதலாக சிறைத் தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.
நீதிபதியின் தீர்ப்பினைத் தொடர்ந்து மாங்காடு போலீசார் குற்றவாளி மணிகண்டனை சிறையில், அடைக்க அழைத்துச் சென்றனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நண்பனை தகாத வார்த்தையால் பேசிய நண்பனைக் கத்தியால் குத்திக் கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்த சம்பவம் காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.