
எல்பிஜி டேங்கர் லாரிகளுக்கான ஒப்பந்தம் தற்காலிகமாக 2026-ஆம் ஆண்டு மார்ச் வரை நீட்டிக்கப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து டேங்கர் லாரிகள் போராட்டத்துக்கு தடை கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்துவைத்தது.
இந்தியன் ஆயில் நிறுவனம் உள்ளிட்ட பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் 2025 முதல் 2030-ஆம் ஆண்டுக்கான டேங்கர் லாரிகள் ஒப்பந்தத்தை சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தன. அதில், 3,500 லாரிகளுக்கு ஒப்பந்தம் கோரிய நிலையில், 2,800 லாரிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டன.
இதையடுத்து தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினர். இந்த வேலைநிறுத்தம் சட்டவிரோதமானது; இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் உள்ளிட்ட பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகள் நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தபோது, எண்ணெய் நிறுவனங்களின் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், புதிய ஒப்பந்தப்புள்ளி பணிகள் இன்னும் நிறைவடையவில்லை. எனவே, தற்போதுள்ள ஒப்பந்தத்தை 2026-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்க தயாராக இருக்கிறோம். இதற்கு இடைப்பட்ட காலத்தில் புதிய ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகள் முடிக்கப்படும் என்று தெரிவித்தார். இதை டேங்கர் லாரி சங்கங்கள் ஏற்றுக்கொண்டன.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் டேங்கர் லாரி சங்கங்களுக்கு இடையிலான தற்போதைய ஒப்பந்தத்தை 2026-ஆம் ஆண்டு மார்ச் வரை நீட்டித்து உத்தரவிட்டார். இடைப்பட்ட காலத்தில் டேங்கர் லாரி சங்கங்கள் எந்தவித வேலைநிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபடக்கூடாது என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.
வேலைநிறுத்தம் வாபஸ்: இது தொடர்பாக தென்மண்டல எல்பிஜி கேஸ் டேங்கர் லாரிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.எல்.எஸ்.சுந்தரராஜன் வெளியிட்ட அறிக்கையில், நடப்பு ஒப்பந்தத்தை 2026 மார்ச் 31 வரை கால நீட்டிப்பு செய்து உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஏற்று, சங்க உறுப்பினர்கள் வேலைநிறுத்தத்தை விலக்கிக் கொண்டு டேங்கர் வாகனங்களில் எரிவாயுவை ஏற்றி அனுப்பும் பணியை மேற்கொள்வர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.