41 பேருக்கு உடல்கூறாய்வு செய்யப்பட்டது எப்படி? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கு உடல்கூறாய்வு செய்யப்பட்டது எப்படி என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கினார்.
41 பேருக்கு உடல்கூறாய்வு செய்யப்பட்டது எப்படி? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
Published on
Updated on
1 min read

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கு உடல்கூறாய்வு செய்யப்பட்டது எப்படி என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கினார்.

சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு, கரூர் சம்பவம் குறித்து விவாதம் நடைபெற்றது. அதில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேசும் போது, 41 பேர் இறந்தவுடன் அவசரமாக உடற்கூறு பரிசோதனை செய்தது ஏன்?

உடல்கூறாய்வு செய்வதென்றால் ஒன்றரை மணி நேரமாகும். கரூர் மருத்துவமனையில் இரண்டு மேஜைகள்தான் இருந்தன. எப்படி இவ்வளவு வேகமாக உடல்கூறாய்வு செய்யப்பட்டது, என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பதில்:

கரூரில் சம்பவம் நிகழ்ந்தவுடன், அரசின் முதன்மைச் செயலரைத் தொடர்பு கொண்டு, கூடுதல் மருத்துவர்கள், பணியாளர்களை அனுப்பி வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். பிற மாவட்டங்களிலிருந்து 813 மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்பட மொத்தம் 1,474 பேர் உடல்கூறாய்வு உள்ளிட்ட மருத்துவப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். கரூர் அரசு மருத்துவமனையில் உடல்கூறாய்வு செய்யும் மருத்துவர்கள் எண்ணிக்கை 3- ஆக மட்டுமே இருந்தது.

அவசர அவசியம் கருதி, இரவு நேர விதிமுறைகளின்படி, மாவட்ட ஆட்சியர்களின் அனுமதி பெற்று உடல்கூறாய்வு செய்யலாம். அதன்படி 39 உடல்களை கூறாய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 22 பேர் உள்பட கரூரில் மொத்தமாக 25 பேர் 5 மேஜைகளில் கூறாய்வு செய்தனர். கடந்த செப்.28-ஆம் தேதி அதிகாலை 1.30 மணிக்குத் தொடங்கி, 29-ஆம் தேதி மாலை 4 மணிக்கு உடல்கூறாய்வுப் பணிகள் முடிவடைந்தன. 14 மணி நேரம் உடல்கூறாய்வு நடைபெற்றது. அனைத்தும் விடியோ பதிவு செய்யப்பட்டது.

கடந்த ஜூன் மாதம் குஜராத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் 229 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். அவர்களின் உடல்கள் 12 மணி நேரத்தில் கூறாய்வு செய்யப்பட்டது.

உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் உடல் கூறாய்வு விடியோ பதிவுகளை அரசு தயாராக வைத்துள்ளது. உடல்கூறாய்வில் ஒளிவுமறைவு இல்லை. அதில் சந்தேகம் கிளப்புவது ஏற்புடையதல்ல என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com