கரூர் பலி! அரசு மீது மக்கள் சந்தேகம் - இபிஎஸ்

கரூரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட காவலர்கள் குறித்து முதல்வர் முரண்பாடாகக் கூறுவதாக எடப்பாடி பழனிசாமி சந்தேகம்
கரூர் பலி! அரசு மீது மக்கள் சந்தேகம் - இபிஎஸ்
Published on
Updated on
2 min read

கரூர் சம்பவத்தின்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட காவலர்கள் குறித்து முதல்வர் முரண்பாடாகக் கூறுவதாக எடப்பாடி பழனிசாமி சந்தேகம் தெரிவித்தார்.

பேரவைக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுக உறுப்பினர்கள், செய்தியாளர்களுடன் பேசுகையில்,

``பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வைக் குறித்து விவாதம் வைக்க வேண்டும் என்று பேரவையை ஒத்திவைத்து பேரவைத் தலைவரிடம் கோரிக்கை வைத்தேன். அதை ஏற்பதாகக் கூறிய பேரவைத் தலைவர், இதுகுறித்த ஒருசில விளக்கங்களை முதல்வர் தருவார் என்று குறிப்பிட்டார்.

கரூர் சம்பவம் குறித்து, பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில் கருத்துகளைத் தெரிவித்த பிறகுதான், முதல்வர் பதிலளிப்பது பொருத்தமாக இருக்கும். விதி எண் 56-ன் கீழ் பேச வாய்ப்பு கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு, முதல்வரை அழைத்து அரசின் கருத்துகளைக் கூறலாம் என்று அனுமதியளித்தார்.

முதல்வர் சொன்ன கருத்துகளையெல்லாம் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தோம். கரூர் நிகழ்வில் திமுக அரசின் நடவடிக்கைகளை முதல்வர் தெரிவித்தார்.

கரூரில் மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் தவெக தலைவர் மீது செருப்பு வீசப்பட்டது. இதனை பேரவையில் கூறினால் நீக்கிவிடுவார்கள் என்பதால்தான், இங்கு கூறுகிறேன். அந்தக் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியாகினர்.

இந்தக் கூட்டத்துக்கு ஸ்டாலின் தலைமையிலான அரசு முழுமையான பாதுகாப்பு கொடுத்திருந்தால் உயிர்ப் பலியைத் தவிர்த்திருக்கலாம். ஆனால், இந்த அரசு எதிர்க்கட்சிக்கு ஒரு நீதியாகவும் ஆளுங்கட்சிக்கு ஒரு நீதியாகவும்தான் பார்க்கப்படுகிறது - அது எந்த எதிர்க்கட்சியாக இருந்தாலும்.

கரூர் கூட்டத்துக்கு முழுமையான பாதுகாப்பை காவல்துறை அளிக்காததாலும், இந்த அரசின் அலட்சியத்தாலும் 41 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இதனையும் அவைக் குறிப்பில் இருந்து நீக்கி விட்டதாகக் கருதுகிறேன். ஏற்கெனவே தவெக தலைவரின் திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர், நாமக்கலுக்கு பிறகுதான் கரூர் வந்தார். ஆகையால், ஏற்கெனவே நடந்த கூட்டத்துக்கு எவ்வளவு பேர் வந்தனர் என்பது காவல்துறையினருக்குத் தெரியும், உளவுத் துறைக்கும் தெரியும், அரசுக்கும் தெரியும். அதற்கேற்றவாறே இடத்தை ஒதுக்கியிருக்க வேண்டும். அவர் கேட்ட இடத்தையும் ஒதுக்கவில்லை.

மக்கள் பங்கேற்கும் அளவுக்கு காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தால், உயிர்ச் சேதத்தைத் தடுத்திருக்கலாம். அதனைச் செய்யவும் அரசு தவறி விட்டது. கரூர் பாதுகாப்புப் பணியில் 500 பேர் ஈடுபடுத்தப்பட்டதாக சமூக ஊடகங்களில் பார்த்தேன். ஆனால், அந்தக் கூட்டத்தில் 500 காவலர்கள் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. எவ்வளவு காவலர்கள் சம்பவ இடத்தில் இருந்தனர்?

500 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக ஏடிஜிபி கூறினார். ஆனால், 600-க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டதாக இன்று முதல்வர் கூறுகிறார். இதிலேயே எவ்வளவு முரண்பாடு இருக்கிறது. இதனால்தான், இந்தச் சம்பவத்தில் அரசின் மீது மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

வேலுச்சாமிபுரத்தில் தவெகவுக்கு மக்கள் சந்திப்புக்காக இடம் ஒதுக்கினர். கடந்த ஜனவரி 24 ஆம் தேதியில், இதே இடத்தை நாங்கள் கேட்டோம். எம்ஜிஆரின் 108 ஆவது பிறந்தநாள் பொதுக் கூட்டம் நடத்த வேண்டும் என்று கேட்டபோது, காவல்துறை அனுமதிக்கவில்லை. வேலுச்சாமிபுரத்தில் அதிகளவில் மக்கள் போக்குவரத்து, குறுகிய சாலை, கூட்டம் கூடும்போது இருபுறமும் சாலை மறிக்கப்படும் சூழல் ஏற்படுவதால், அந்த இடத்தைத் தரவியலாது என்று மறுத்தனர்.

ஏற்கெனவே நிராகரிக்கப்பட்ட இடத்தைத்தான், தவெகவின் மக்கள் சந்திப்புக் கூட்டத்துக்குக் கொடுத்திருக்கின்றனர். நிராகரிக்கப்பட்ட இடத்தை எப்படி கொடுப்பீர்கள்?

ஏற்கெனவே 4 மாவட்டங்களில் கூட்டம் நடத்தியிருக்கிறார் - எவ்வளவு மக்கள் கூடியிருக்கின்றனர் என்பது அரசுக்கும் காவல்துறைக்கும் தெரியும்.

அப்படியிருந்தும், ஏதேனும் ஓர் அசம்பாவிதம் ஏற்பட வேண்டும் என்ற உள்நோக்கத்தோடுதான், வேலுச்சாமிபுரத்தைக் கொடுத்ததாக மக்கள் பேசுகின்றனர். இதுதான் முழுமையான உண்மை என்று நாங்களும் கருதுகிறோம்.

ஒரு லட்சம் பேர் கலந்துகொண்ட முப்பெரும் விழாவை முதல்வர் நடத்தினார். அந்த இடத்தைக் கொடுத்திருக்கலாமே. அப்படி கொடுத்திருந்தால், அசம்பாவிதத்தைத் தடுத்திருக்கலாமே. ஆனால், அப்படியெல்லாம் கொடுக்கவில்லை. இப்படி ஏதாவது ஒரு சம்பவம் நடக்க வேண்டும் என்று இந்த அரசு திட்டமிட்டுத்தான், நிராகரிக்கப்பட்ட இடத்தைக் கொடுத்து, இந்த அரசினால், காவல்துறையின் அலட்சியத்தால், முழுமையான பாதுகாப்பு கொடுக்காத காவல்துறையால்தான் இந்த சம்பவம் ஏற்பட்டதாக மக்கள் சந்தேகிக்கின்றனர்’’ என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க: தூத்துக்குடி Vs கள்ளக்குறிச்சி! மு.க.ஸ்டாலின், இபிஎஸ் இடையே அனல்பறந்த விவாதம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com