
சாலைகளில் தற்காலிக கொடிக்கம்பங்கள் அமைக்க அனுமதி கோருபவர்களிடம் ஒரு கொடிக்கம்பத்துக்கு தலா ரூ.1,000 வசூலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.
தமிழகம் முழுவதும் பொது இடங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், ஜாதி மத அமைப்புகள் மற்றும் சங்கங்களின் கொடிக்கம்பங்களை ஏப்.28-ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதி ஜி.கே.இளந்திரையன், கடந்த ஜன.27-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார். மேலும், இந்த உத்தரவு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, அரசியல் கட்சிகள், அமைப்புகளின் சார்பில் கொடிக்கம்பங்கள் அமைக்க அனுமதி வழங்குவது தொடர்பாக மண்டல மற்றும் மாவட்ட அளவில் குழுக்களை அமைத்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், சாலையின் நடுவிலும் (சென்டர் மீடியன்) மற்றும் சாலை ஓரங்களில் தற்காலிக கொடிக்கம்பங்கள் வைப்பதற்காக வகுக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளும் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.
இளந்திரையன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான, கூடுதல் தலைமை வழக்குரைஞர் ஜெ.ரவீந்திரன், கொடிக்கம்பங்கள் தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணை மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதாக தெரிவித்தார்.
இதனை ஏற்க மறுத்த நீதிபதி, அரசியல் கட்சிகள் நடத்தும் மாநாடு, பொதுக்கூட்ட நிகழ்வுகளின்போது, சட்டவிரோதமாக சாலையின் நடுவில் தற்காலிக கொடிக்கம்பங்கள் வைக்கப்படுகின்றன. அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. எனவே, அவ்வாறு சாலையின் நடுவில் தற்காலிக கொடிக்கம்பங்கள் அமைக்க அனுமதி கோருபவர்களிடம் இருந்து ஒரு கொடிக் கம்பத்துக்கு தலா ரூ.1,000 வசூலிக்க வேண்டும். அவ்வாறு வசூலித்தால் அரசுக்கு வருவாய் கிடைக்கும் என்றார்.
பின்னர், கொடிக்கம்பங்கள் தொடர்பான அரசாணை மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அனைத்து துறைத் தலைவர்களுக்கும், தலைமைச் செயலர், காவல்துறை டிஜிபி சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும். சட்டவிரோத கொடிக்கம்பங்கள் வைப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை நவ.12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.