மதுரை மாநகராட்சி மேயர் ராஜிநாமா
மதுரை மாநகராட்சி மேயர் வ. இந்திராணி (திமுக) பதவியிலிருந்து விலகுவதாக புதன்கிழமை கடிதம் அளித்தார்.
மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள வணிக வளாகங்களுக்கு அரசு நிர்ணயித்த வரியைவிடக் குறைவான வரியை விதித்து முறைகேடு நடைபெற்றதாக கடந்த 2024-ஆம் ஆண்டில் புகார் எழுந்தது. இதுதொடர்பாக அப்போதைய மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் மத்திய குற்றப் பிரிவில் புகார் அளித்தார்.
இதுகுறித்த விசாரணையில், சொத்து வரியைக் குறைத்து கணக்கிட்டதும், இதன்மூலம் மாநகராட்சிக்கு ரூ. 150 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டதும் தெரியவந்தது.
இது, மாநில அளவில் பெரும் பேசுபொருளானது. இந்த முறைகேட்டைக் கண்டித்து அதிமுக சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதையடுத்து, மத்திய குற்றப் பிரிவு விசாரணைக்கு உள்ளான மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் 5 பேரும், நகரமைப்புப் பிரிவு தலைவர்கள் 2 பேரும் பதவி விலகினர். முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், அவர்கள் பதவி விலகியதாகக் கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மேயர் வ. இந்திராணியின் கணவர் பொன். வசந்த் (திமுக), ஓய்வு பெற்ற உதவி ஆணையர், உதவி வருவாய் அலுவலர் உள்பட 23 பேரை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
இருப்பினும், வரி முறைகேடு தொடர்பாக மேயர் இந்திராணி மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாதது குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளும் விமர்சனங்களை முன்வைத்தன. மேயரை பதவி நீக்கம் செய்யக் கோரி அதிமுக, பாஜக மாமன்ற உறுப்பினர்கள் இரு முறை மாமன்றக் கூட்டத்தைப் புறக்கணித்தனர். இருப்பினும், கடந்த மாதம் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் அவர்கள் பங்கேற்றனர்.
கடந்த ஆக. 12-ம் தேதி கைது செய்யப்பட்டு, ஏறத்தாழ இரண்டரை மாதங்கள் சிறையிலிருந்த மேயரின் கணவர் பொன். வசந்த், கடந்த 9-ஆம் தேதி பிணையில் வெளியே வந்தார்.
இந்த நிலையில், மேயர் இந்திராணி தனது பதவி விலகல் கடிதத்தை ஆணையர் சித்ரா விஜயனிடம் புதன்கிழமை அளித்ததாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. மேயரின் பதவி விலகல் கடிதம், வருகிற வெள்ளிக்கிழமை (அக். 17) துணை மேயர் தி. நாகராஜன் தலைமையில் நடைபெறவுள்ள மாமன்றக் கூட்டத்தில் ஒப்புதலுக்கு வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தேர்தலுக்காக...? வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் மதுரை மாநகராட்சி வரி முறைகேடு விவகாரத்தால் திமுகவுக்கு பின்னடைவு ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில், அந்தக் கட்சித் தலைமையின் அறிவுறுத்தல்படி மேயர் வ. இந்திராணி தனது பதவி விலகல் கடிதத்தை அளித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.