கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணையை கண்காணிக்கும் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழுவில் தமிழகத்தில் பிறந்த காவல் அதிகாரிகள் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று பேரவையில் பல்வேறு கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
கரூர் துயர சம்பவம் தொடர்பாக பேரவையில் அனைத்து கட்சியினர் எழுப்பிய விவாதம்:
கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): இந்தியாவையே வியக்க வைத்த திறமைபடைத்த ஐஜி அருள் போன்ற காவல் உயர்அதிகாரிகள் தமிழகத்தில் இடம்பெற்றிருக்கின்றனர். ஆனால், கரூர் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணைக்கான உச்சநீதிமன்ற நேரடி கண்காணிப்புக் குழுவில் தமிழகத்தில் பணியாற்றும் வெளிமாநில காவல் அதிகாரிகள் இருவர் இடம்பெற வேண்டும் என குறிப்பிட்டுள்ளது வருத்தமளிக்கிறது.
தமிழகத்தில் பணியாற்றும் வெளிமாநில அதிகாரிகள், தமிழர்களாகவே மனதளவில் மாறி பணியாற்றுகின்றனர். இருப்பினும், தமிழகத்தில் பிறந்த அதிகாரிகளை இக்குழுவில் இடம்பெறச் செய்ய முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜி.கே.மணி (பாமக): இந்த சம்பவத்தில் அரசியல் செய்யாமல், இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவத்தில் உண்மை நிலையை கண்டறிய வேண்டும்.
நயினார் நாகேந்திரன் (பாஜக): ஏழு மணி நேர காலதாமதமாக அந்த அரசியல் தலைவர் வந்ததால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பது சரி. ஆனால், பத்து ரூபாய் பாடல் பாடப்பட்ட பின்னர்தான் பாட்டில், காலணி வீச்சு, போலீஸ் தடியடி சம்பவங்கள் நிகழ்ந்தன. அதைத்தொடர்ந்து கூட்ட நெரிசல் உருவானது என தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்க்கட்சியினர் கூட்டம் நடத்த நீதிமன்றத்தை அணுகித்தான் அனுமதிபெற வேண்டியுள்ளது.
எஸ்.எஸ்.பாலாஜி (விசிக): அரசியல் கட்சித் தலைவர் கூட்டம் நடத்தினால், கொள்கை, கருத்தியலை உள்வாங்கும் கட்டுப்பாடான கூட்டம் கூடும். ஆனால், நடிகர் கூட்டம் கூட்டினால் அவரை நேரில் பார்க்க கட்டுப்பாடற்ற, கட்டுக்கடங்காத கூட்டம் கூடும்.
நாகை வி.பி.மாலி (மார்க்சிஸ்ட்): திரைப்படக் காட்சிபோல அரசியல் கட்சிக் கூட்டத்தை அரங்கேற்றியதால்தான் விபத்து ஏற்பட்டது. வெளிநடப்பு செய்த அதிமுகவினரால் அதற்கான காரணத்தைக்கூட சொல்லமுடியவில்லை. இந்த விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இரவோடு, இரவாக எடுத்த துரித நடவடிக்கை பாராட்டுக்குரியது.
கே.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்): நாமக்கல்லில் காலை 8.45 மணி, கரூரில் பகல் 12 மணி என அனுமதி கேட்டுவிட்டு சென்னையில் இருந்து காலை 8.45 மணிக்கு அந்த கட்சித் தலைவர் புறப்பட்டிருக்கிறார். 7 மணி நேர காலதாமதத்தால்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மு.பூமிநாதன் (மதிமுக): குடிநீர்வசதி கூட செய்துகொடுக்காமல் 7 மணி நேரத்துக்கு மேல் அரசியல் கட்சி கூட்டம் நடத்தியது தவறு.
எம்.ஹெச்.ஜவாஹிருல்லா (மமக): சம்பவம் நிகழ்ந்தவுடன் அந்த கட்சித் தலைவர் சென்னைக்கு சென்று விட்டார். மற்றவர்கள் தலைமறைவாகிவிட்டனர். குறைந்தபட்சம் அந்த கட்சித் தலைவர் திருச்சியில் தங்கியிருந்துவிட்டு மறுநாள் சம்பவ இடத்தை பார்வையிட்டிருக்க வேண்டும். ஆனால், மாநில அரசு சதி செய்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டுவது தவறு.
ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொமதேக): அரசு முறையாக இந்த சம்பவத்தை கையாண்டதால்தான் உயிரிழப்புகள் குறைந்துள்ளன.
தி.வேல்முருகன் (தவெக): நடிகர் மீதான ஈர்ப்பால் கூட்டம் கூடி தமிழர்கள் இறப்பது வேதனை அளிக்கிறது. கூட்டத்தை நடத்தியவர்கள்தான் இந்த சம்பவத்துக்கு பதில் அளிக்க வேண்டும்.
உச்சநீதிமன்றத்தை அரசு அணுகும்: முதல்வர்
உறுப்பினர்களின் விவாதத்தின்போது முதல்வர் ஸ்டாலின் குறுக்கிட்டு, "உச்சநீதிமன்ற கண்காணிப்புக்குழுவில் தமிழகத்தில் பணியாற்றும் வெளிமாநில ஐபிஎஸ் அதிகாரிகள் இடம்பெற வேண்டும் எனக் குறிப்பிட்டிருப்பது வேதனைக்குரியதுதான். இதுகுறித்து உரிய சட்ட ஆலோசனை நடத்தி, உச்சநீதிமன்றத்தை அரசு அணுகும். தண்ணீர் பாட்டில், காலணி உள்ளிட்டவை வீசியது யார் என்பது சிபிஐ விசாரணையில் தெரியவரும்.
கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டிப் பேசினார். பின்னர் பேரவைத் தலைவரின் வேண்டுகோளையும் மீறி அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். தர்னா நடத்தியதற்கான காரணத்தை அதிமுகவினரால் சொல்ல முடியவில்லை. கரூர் விவகாரம் தொடர்பாக ஆக்கபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார் முதல்வர் ஸ்டாலின்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.