ஒருங்கிணைந்த மனிதநேயத் தத்துவத்தின் வழிகாட்டும் கொள்கைதான் இந்தியாவின் வளர்ச்சி: ஆளுநர் ஆர்.என். ரவி

ஒருங்கிணைந்த மனிதநேயத் தத்துவத்தின் வழிகாட்டும் கொள்கைதான் இந்தியாவின் வளர்ச்சி என்று தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என். ரவி தெரிவித்தார்.
ஒருங்கிணைந்த மனிதநேயத் தத்துவத்தின் வழிகாட்டும் கொள்கைதான் இந்தியாவின் வளர்ச்சி: ஆளுநர் ஆர்.என். ரவி
Published on
Updated on
1 min read

ஒருங்கிணைந்த மனிதநேயத் தத்துவத்தின் வழிகாட்டும் கொள்கைதான் இந்தியாவின் வளர்ச்சி என்று தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என். ரவி தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பண்டிட் தீனதயாள் உபாத்யாய இருக்கையின் சார்பில் "வளர்ச்சியடைந்த இந்தியா- 2047-நல்லாட்சியும் நிலையான வளர்ச்சிக்கு வழிகாட்டும் ஒருங்கிணைந்த மனித நேயமும்' என்ற தலைப்பிலான இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கத்தின் தொடக்க விழா பல்கலைக்கழக பட்டமளிப்பு அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு தலைமை வகித்து, ஆளுநர் ஆர்.என். ரவி பேசியதாவது:

இளைஞர்கள் பெரிய கனவுகளைக் காணவும், தேசக் கட்டமைப்பில் பங்காற்றவும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஊக்கமளித்தார்.

நாடு முழுவதும் 70 லட்சம் பழங்குடியினரும், தமிழ்நாட்டில் 12 லட்சம் பழங்குடியினரும் உள்ளனர். இவர்களுக்கு பலனளிக்கும் திட்டங்களை பிரதமர் மோடி அரசு செயல்படுத்துவது சிறப்புக்குரியது. மேலும், தீனதயாள் உபாத்யாய தத்துவத்தின் அடிப்படையே நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்பதே.

இந்தியா தற்போது உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக உயர்ந்துள்ளது. இதற்கு ஒருங்கிணைந்த மனிதநேய தத்துவங்களை கடைப்பிடிப்பதே காரணம்.

இந்தத் தத்துவத்தின் கோட்பாடுகள் இந்திய அரசின் வெளிநாட்டு கொள்கைகளிலும் பிரதிபலிக்கின்றன. ஒருங்கிணைந்த மனிதநேய தத்துவத்தின் வழிகாட்டும் கொள்கைதான் இந்தியாவின் வளர்ச்சி, ஆட்சி, உலகளாவிய நிலையைத் தொடர்ந்து வடிவமைத்து வருகிறது என்றார் அவர்.

இந்தக் கருத்தரங்கில் தில்லி இந்திய கலாசார மையத்தின் தலைவர் வினய் பி.சஹஸ்ரபுத்தே பேசியதாவது:

தமிழ்நாட்டின் மகத்தான தேசிய நாயகர்களான அப்துல் கலாம், திருவள்ளுவர், சுப்பிரமணிய பாரதி, காமராஜர் ஆகியோரின் பங்களிப்பு நினைவுகூரத்தக்கது. தமிழ்நாடு எப்போதும் சிந்தனையாளர்கள், சீர்திருத்தவாதிகள், தேசியவாதிகளை நாட்டுக்குத் தந்த புண்ணிய பூமியாகும் என்றார் அவர். கருத்தரங்கில் திண்டுக்கல் காந்தி கிராம நிகர்நிலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் என். பஞ்சநதம், பேராசிரியர் பி. தர்மலிங்கம் ஆகியோரும் பேசினர்.

முன்னதாக, அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் க. ரவி வரவேற்றார். பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அ. செந்தில்ராஜன் நன்றி கூறினார்.

கலாமுக்கு ஆளுநர் மரியாதை: முன்னதாக, பல்கலைக்கழக அறிவியல் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உருவச் சிலைக்கு ஆளுநர் ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com