கரூரில் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்த சம்பவம் தொடர்பாக, சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
சட்டப்பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு, கரூர் சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் மீது நடைபெற்ற விவாதம்:
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி: நேரமில்லாத நேரத்தில் எதிர்க்கட்சி சார்பில் பிரச்னை எழுப்ப வேண்டும். அதற்கு ஆளும்கட்சி தரப்பில் பதில் தர வேண்டும். மரபுக்கு மாறாக, எதிர்க்கட்சிகள் பேசாமல் முதல்வரே பேசுகிறார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: கரூரில் யாரும் எதிர்பாராத சம்பவம் நடந்துள்ளது. பேரவை நடைபெறும் நேரத்தில் அதைத் தெரிவிக்க வேண்டும். அந்த வகையிலே அறிக்கையைப் படித்தேன்.
எடப்பாடி கே.பழனிசாமி: தவெக தலைவர் பிரசார நிகழ்வுக்கு குறுகிய சாலையில் அனுமதி கொடுத்தது ஏன்?
முதல்வர்: கூட்டணிக்கு ஆள்களைத் தேடிக் கொண்டிருக்கிறீர்கள். அரசியலாக்க வேண்டாம் எனக் கூறி வருகிறேன். தேவையில்லாமல், உள்நோக்கம் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறுவதை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்.
எடப்பாடி கே.பழனிசாமி: முதல்வர் ஏன் பதறுகிறார்? காவல் துறை அதிகாரிகள் ஏன் அனுமதி தந்தார்கள்? நீங்கள்தான் அரசியல் செய்கிறீர்கள் எனக் கூறி ஒரு வார்த்தை தெரிவித்தார்.
(எடப்பாடி பழனிசாமி கூறிய வார்த்தைக்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் எழுப்பினர். பதிலுக்கு அதிமுகவினரும் கூச்சல் எழுப்பினர். அவர்களை பேரவைத் தலைவர் மு.அப்பாவு அமைதிப்படுத்தினார்) .
முதல்வர்: கவனத்தை ஈர்த்துப் பேசுவதுதான் முறை. தேவையில்லாமல் பேசுவது சரியல்ல.
அவை முன்னவர் துரைமுருகன்: பெரிய சம்பவத்தை அரசின் சார்பில் படித்தார். யாரையும் குற்றம் சொல்லவில்லை. என்ன நடந்தது, நாங்கள் என்ன செய்தோம் என்பதை அறிக்கையாகத் தந்தார். உள்நோக்கம் இருப்பதாகப் பேசுவது சரியானது இல்லை. அதை நீக்க வேண்டும்.
எடப்பாடி கே.பழனிசாமி: கூட்டணிக்காகப் பேசுகிறோம் என முதல்வர் பேசினார். அப்படியென்றால் அதையும் நீக்க வேண்டும். நீங்கள் பேசுவதில் உள்நோக்கம் இல்லையா?.
முதல்வர்: இருவர் பேசியதும் அவைக் குறிப்பில் இருக்கட்டும்.
எடப்பாடி கே.பழனிசாமி: உயிரிழந்தவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், மனித உயிர்கள் என்ற அடிப்படையில் பேசி வருகிறோம். நாங்கள் எந்த அரசியலும் செய்யவில்லை. இந்தியாவிலேயே அரசியல் கட்சிக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நடந்தது கிடையாது. திமுக ஆட்சியில்தானே நடந்துள்ளது.
ஒரு நபர் ஆணையத்தை இரவோடு இரவாக அமைத்தீர்கள். எந்த அமைப்பையும் ஏற்படுத்தவில்லை. காலை 6 மணிக்கே தனி விமானத்தில் சென்று ஆணையத் தலைவர் விசாரிக்கிறார். உதவியாளர்கூட கிடையாது. எப்படி கருத்துகளைப் பதிவு செய்ய முடியும்?
அவை முன்னவர்: சம்பவம் நடந்துவிட்டது என்பதற்காக முதல்வர் இரவு முழுவதும் தூங்காமல் இருந்து பணிகளைச் செய்தார். அதைப் பாராட்ட வேண்டாமா?
முதல்வர்: தனி விமானத்தில் ஆணையத் தலைவர் சென்றார் என எதிர்க்கட்சித் தலைவர் கூறினார். அவர் செப்.28-ஆம் தேதி மதியம்தான் சென்றுள்ளார். முதல்வர் என்ற கடமையின் அடிப்படையிலேயே நான் சென்றேன். தூத்துக்குடியில் நடந்த சம்பவம் (துப்பாக்கிச்சூடு) தொடர்பாக பத்திரிகையாளர் கேட்டதற்கு இப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் என்ன சொன்னார்? (அதிமுக, திமுக உறுப்பினர்கள் கடும் கூச்சல்)
எடப்பாடி கே.பழனிசாமி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி பலர் இறந்தனர். அப்போது உயிரிழந்தவர்களைப் போய் பார்க்கவில்லையே? அவர்களும் மக்கள்தானே.
முதல்வர்: அந்த நேரத்தில் அமைச்சர்கள் அனைவரும் சென்று பார்த்தனர். அங்கு கள்ளச்சாராயம் அருந்தி இறந்தனர். கரூரில் அப்பாவி மக்கள் மிதிபட்டு இறந்தனர். அதை நினைத்துப் பாருங்கள்.
எடப்பாடி கே.பழனிசாமி: கரூர் சம்பவம் தொடர்பாக அரசு அதிகாரிகள் குழுவினர் பேட்டி அளிக்கின்றனர்.
முதல்வர்: சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பப்பட்டது. அதிகாரிகள் அரசியல் எண்ணத்துடன் பேட்டி கொடுக்கவில்லை. கரோனா காலத்திலோ, முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா மருத்துவமனைகளில் இருந்தபோதோ அதிகாரிகள் பேட்டி கொடுக்கவில்லையா?
எடப்பாடி கே.பழனிசாமி: ஆதாரம் கிடைத்தால் ஒருநபர் ஆணையத்திடம்தான் தரப்பட வேண்டும். நீங்களே ஆணையத்தை அமைத்துவிட்டு, அதிகாரிகள் மூலம் பதில் சொல்ல வைப்பது ஏன்?.
முதல்வர்: அதிகாரிகள் பதில்களை அளித்தது, அரசியல் ரீதியாக இல்லை. அலுவல் ரீதியாகத்தான்.
எடப்பாடி கே.பழனிசாமி: சிறுநீரக முறைகேடு வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு சிறப்பு விசாரணைக் குழு அமைத்தது. அந்தக் குழுவுக்கு ஏன் அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை? அதில்தான் மக்களுக்குச் சந்தேகம் ஏற்படுகிறது. அதிமுக ஆட்சியில் பல்லாயிரக்கணக்கான கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. கரூரில் கூட்டம் நடத்த மட்டும் நீதிமன்ற அனுமதி பெற வேண்டியுள்ளது.
முதல்வர்: தகுதியான இடத்தைத் தேர்வு செய்வதற்காக கரூரில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. கோட்டாட்சியர் தலைமையில் நடந்த கூட்டத்தில் அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படியே கூட்டங்களுக்கு அனுமதி தரப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.