
தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கு வரையறுக்கப்பட்டுள்ள நிலத்துக்கான உச்சவரம்பில் தளர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சட்டத் திருத்த மசோதா, பேரவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தாக்கல் செய்த அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாட்டில் தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்காக, 100 ஏக்கர் தொடர்ச்சியான நிலம் தேவைப்படுகிறது. மாநகராட்சிப் பகுதிகள், நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் செயல்படும் கல்வி நிறுவனங்கள், அந்தப் பகுதிகளில் அத்தகைய மிகப்பெரிய அளவிலான தொடர்ச்சியான நிலத்தை அடையாளம் காண்பது மிகவும் கடினமாக உள்ளது.
பிற அண்டை மாநிலங்களின் தனியார் பல்கலைக்கழகங்களின் சட்டங்களுக்கு இணங்க நிலத்தின் தேவை குறைக்கப்பட்டால், தகுதியான மற்றும் உரிய கல்வி நிறுவனங்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படலாம்.
எனவே, மாநகராட்சிப் பகுதிக்குள் பல்கலைக்கழகத்தை உருவாக்க 25 ஏக்கருக்கு குறையாமலோ, நகராட்சி அல்லது பேரூராட்சி பகுதிக்குள் கல்வி நிறுவனத்தை உருவாக்க 30 ஏக்கருக்கு குறையாமலோ நிலத்தின் பரப்பளவு இருக்க வேண்டும். பிற பரப்பிடமாக இருந்தால் மொத்த நிலத்தின் அளவு 50 ஏக்கருக்கு குறையாமல் தொடர்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்று சட்டத் திருத்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.