துணை மதிப்பீட்டுத் தொகை ரூ.2,915 கோடி: பேரவை ஒப்புதல்

தமிழக சட்டப்பேரவையில், 2025-26 -ஆம் ஆண்டுக்கு கூடுதல் செலவினங்களுக்கான துணை மதிப்பீட்டுத் தொகை ரூ.2,914.99 கோடி ஒதுக்கீட்டுக்கு பேரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அமைச்சர் தங்கம் தென்னரசு.
அமைச்சர் தங்கம் தென்னரசு.
Published on
Updated on
1 min read

தமிழக சட்டப்பேரவையில், 2025-26 -ஆம் ஆண்டுக்கு கூடுதல் செலவினங்களுக்கான துணை மதிப்பீட்டுத் தொகை ரூ.2,914.99 கோடி ஒதுக்கீட்டுக்கு பேரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பேரவையில் 2025-26-ஆம் ஆண்டுக்கான முதல் துணை மதிப்பீடுகளைத் தாக்கல் செய்து நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:

நிகழ் நிதியாண்டின் (2025-26) பட்ஜெட் திட்ட மதிப்பீடுகள் தாக்கல் செய்யப்பட்ட பிறகு புதிய பணிகள் மற்றும் புதிய துணைப் பணிகள் குறித்து ஒப்பளிப்பு செய்யப்பட்ட இனங்களுக்கு பேரவையில் ஒப்புதல் பெறுவதும், எதிர்பாராத செலவு நிதியில் இருந்து விடுவிக்கப்பட்ட தொகையை அந்த நிதிக்கு ஈடுசெய்வதும் துணை மானியக் கோரிக்கையின் நோக்கமாகும்.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி இயற்கை எய்திய, ஓய்வு பெற்ற மற்றும் தன்விருப்ப ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு உரிய ஓய்வூதிய பணப் பலன்களை வழங்க, முன்பணமாக ரூ.137.97 கோடியை அரசு அனுமதித்துள்ளது.

கடந்த 2024 ஃபென்ஜால் புயல் பாதிப்புகளுக்காக தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 2025-26-இல் பெறப்பட்ட உதவித்தொகை ரூ.522.34 கோடியை, மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு மாற்றம் செய்ய அரசு அனுமதித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழங்களில் பழைய பேருந்துகளுக்குப் பதிலாக 3,000 புதிய பி.எஸ். 6 வகை பேருந்துகளை 2025-26-ஆம் ஆண்டில் வாங்குவதற்காக பங்கு மூலதன உதவியாக ரூ.471.53 கோடியை கூடுதலாக அரசு அனுமதித்துள்ளது.

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தைச் செயல்படுத்த கூடுதல் தொகை ரூ.469.84 கோடியை அரசு அனுமதித்துள்ளது. இதற்கான துணை மதிப்பீடுகளில் மானியக் கோரிக்கை எண். 42-ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை என்பதன்கீழ் ஒவ்வோர் இனத்தின் கீழும் ரூ.1,000 சேர்க்கப்பட்டுள்ளது. மீதத்தொகை மானியத்தில் ஏற்படும் சேமிப்பில் இருந்து மறு நிதி ஒதுக்கீடு மூலம் செலவிடப்படும் என்றார் அவர்.

நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த, 2025-26-ஆம் ஆண்டுக்கான துணை மதிப்பீடுகளுக்கான தொகை ரூ.2,914.99 கோடி ஒதுக்கீட்டுக்கு பேரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com