ஹைட்ரோ காா்பன் திட்டத்துக்கு முயற்சி: காங்கிரஸ் எம்எல்ஏ குற்றச்சாட்டு
கன்னியாகுமரி கடலில் ஹைட்ரோ காா்பன் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு முயற்சி செய்து வருவதாக குளச்சல் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் ஜே.ஜி.பிரின்ஸ் குற்றஞ்சாட்டினாா்.
பேரவையில் கூடுதல் செலவுக்கான மானியக்கோரிக்கைகள் விவாதத்தின்போது, பிரின்ஸ் எம்எல்ஏ பேசும்போது, கன்னியாகுமரியை சுற்றுலா மாவட்டமாக மாற்ற வேண்டும். அங்கு விமான நிலையம் அமைக்க வேண்டும் என்றாா்.
அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா: கன்னியாகுமரியில் வெகுவிரைவில் விரைவில் டைடல் பூங்கா, சூழலியல் சுற்றுலா மையம் ஆகியவை அமைக்க விரைவில் அடிக்கல் நாட்டப்படும்.
பிரின்ஸ் எம்எல்ஏ: கன்னியாகுமரி கடலில் ஹைட்ரோ காா்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த இருப்பதாக தகவல் பரவியுள்ளது. இதை அங்குள்ள மக்கள் தலைமையில் நிச்சயம் தடுத்து நிறுத்துவோம். இருப்பினும், தமிழக அரசின் நிலை என்ன என்பதை தெரிவிக்க வேண்டும்.
அமைச்சா் தங்கம் தென்னரசு: பொதுமக்களிடம் கருத்து கேட்டறியாமல் இதுபோன்ற திட்டங்களைச் செயல்படுத்த மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. ஆனால், கடலாக இருந்தாலும், சமவெளிப் பகுதியாக இருந்தாலும் ஹைட்ரோ காா்பன் உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் திட்டங்களுக்கு தமிழக அரசு ஒருபோதும் அனுமதி அளிக்காது.