
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் மாதத்துடன் தென்மேற்குப் பருவமழை நிறைவு பெற்ற நிலையில், தீபாவளிப் பண்டிகைக்கு 4 நாள்களே இருக்கும் நிலையில், இன்று தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியிருக்கிறது.
முதல் நாளிலேயே, 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மழை நிலவரம் குறித்து கணித்து தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து வரும் தமிழ்நாடு வெதர்மேன் என அறியப்படும் பிரதீப் ஜான் கூறியிருப்பதாவது, அக்.16ஆம் தேதிக்கான மழை நிலவரம் - சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் சூரியன் சுட்டெரிக்கும். ஆனால் திடீரென மழை மேகங்கள் சூழ்ந்து மழையும் மொழியும் வாய்ப்பு உள்ளது. இன்று மாலை அல்லது இரவு முதல் மழை சற்று வேகமெடுக்கும்.
எனவே, வெளியே கிளம்பும்போது வெயில் சுட்டெரித்தாலும் கையில் மழைக் கவசம் அல்லது குடையை மறக்காமல் கொண்டு செல்லுங்கள். நிச்சயம் உதவும்.
மேலும், அக்டோபர் 23ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை தீவிரம் பிடிக்கும். வங்காள விரிகுடாவில் புயல் சின்னம் உருவாகவும் வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார்.
வடகிழக்குப் பருவமழை!
இந்திய பகுதிகளில் இருந்து தென்மேற்கு பருவமழை வியாழக்கிழமை பிற்பகலுக்குள் விலகிவிட்டது. அதேவேளை, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள், கேரளம், மாஹே, தெற்கு உள்கர்நாடகம், ராயலசீமா, தெற்கு கடலோர ஆந்திர பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.