
நான் மருத்துவமனையில் இருந்தபோது ஒரு கட்சி மட்டும் தன்னை நலம் விசாரிக்கவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் இதய பரிசோதனைக்காக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ராமதாஸ் கடந்த 5 ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று அக். 7 ஆம் தேதி வீடு திரும்பினார். அவரை முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினரும் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
இந்நிலையில் விழுப்புரத்தில் இன்று செய்தியாளர்களுடன் பேசிய ராமதாஸ்,
"தமிழ்நாட்டில் இருக்கின்ற முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் கட்சி பேதமின்றி, பொதுவாழ்விலே இருப்பவர்கள் எல்லோரும் நேரிலே வந்து என்னை நலம் விசாரித்தார்கள். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. சிலர் நேரிலும் சிலர் தொலைபேசியிலும் நலம் விசாரித்தார்கள். ஆனால் ஒரு கட்சியைத் தவிர, அது புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கட்சி" என்று கூறினார்.
பின்னர் ராமதாஸ் மருத்துவமனையில் இருந்தபோது, 'அவர் ஐசியு எனும் அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். அதனால் அவரை பார்க்க முடியவில்லை. சில நாள்கள் மருத்துவமனையில் ஓய்வு எடுக்க வேண்டும்' என்று அன்புமணி ராமதாஸ் கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்த ராமதாஸ், "நான் ஐசியு-வில் இல்லை. அப்படிப்பட்ட நிலைமை எனக்கு ஏற்படவில்லை . அந்த வார்டுக்கு நான் போகவும் இல்லை. இதயத்துக்கு செல்லும் ரத்த குழாய்கள் நன்றாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
படிக்காத ஒரு மாடு மேய்க்கிற சிறுவன்கூட இப்படிப்பட்ட வார்த்தைகளை பேசியிருக்க மாட்டான். அன்புமணிக்கு தலைமை பண்பு இல்லை என்று நிர்வாகக் குழுவிடம் ஒருமுறை சொன்னேன். அது இன்று உறுதியாகிவிட்டது. அன்புமணிக்கும் பாமகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று கூறினார்.
வருகின்ற டிசம்பர் 30 ஆம் தேதி ராமதாஸ் தலைமையில் நடைபெறும் பாமக பொதுக்குழு கூட்டத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.