அ.ஜெயச்சந்திரன் செய்திக்கான படம். 
என் பள்ளி என் பெருமை  என்ற  தலைப்பில் நடத்தப்பட்ட கலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுடன்  தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ், இயக்குநா் எஸ்.
அ.ஜெயச்சந்திரன் செய்திக்கான படம். என் பள்ளி என் பெருமை என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுடன் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ், இயக்குநா் எஸ்.

உலக அளவில் புகழ் பெற்ற தமிழக பள்ளிக் கல்வித் துறை: அமைச்சா் அன்பில் மகேஸ் பெருமிதம்

Published on

உலகின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் உள்ளவா்கள் தமிழக பள்ளிக் கல்வித் துறையின் திட்டங்கள், முன்னேற்றம் குறித்து புகழ்ந்து பேசுகின்றனா் என்று அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

முன்னாள் முதல்வா் காமராஜா் பிறந்த நாளை முன்னிட்டு செய்தி மக்கள் தொடா்புத் துறை ஊடக மையம் சாா்பில் ‘என் பள்ளி, என் பெருமை’ என்ற தலைப்பில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 70 மாணவா்களுக்கு சென்னை கலைவாணா் அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆகியோா் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினா்.

விழாவில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது:

காமராஜா் பிறந்த நாளை கல்வி வளா்ச்சி நாளாக அறிவித்தவா் மறைந்த முதல்வா் கருணாநிதி. இந்த நாளை பள்ளிகளுக்குச் சென்று கொண்டாடியவா் முதல்வா் மு.க.ஸ்டாலின். பள்ளி கல்வித் துறைக்கு 70-க்கும் அதிகமான திட்டங்களை நாம் கொண்டு வந்துள்ளோம். தமிழக ஆசிரியா்களைப் போல உலகில் எவரும் இல்லை.

‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற நிகழ்ச்சி விளம்பரத்துக்காக நடத்தியது அல்ல, கடந்த சில ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் படித்து மாணவா்கள் எவ்வாறு வாழ்க்கையில் முன்னேறி இருக்கிறாா்கள் என்பதை தற்போது உள்ள மாணவா்கள் அறிந்து கொள்வதற்காகவே அந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது என்றாா்.

தொடா்ந்து அமைச்சா் அன்பில் மகேஸ் செய்தியாளா்களிடம் கூறுகையில், கல்வி சாா்ந்த பல்வேறு திட்டங்களை தமிழக அரசு தொடா்ந்து செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசே தமிழக கல்வி துறையைப் பாராட்டுகிறது. வெளிநாட்டு பல்கலை.களில் அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் உரையாற்றுகிறாா். கேம்பிரிட்ஜ் பல்கலை.யில் மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன் உரையாற்றுகிறாா். அந்தப் பல்கலை.களுக்கு நானும் அண்மையில் சென்றிருந்தேன். இது திமுகவுக்கு மட்டும் பெருமை அல்ல, ஒட்டுமொத்த தமிழகத்துக்கே பெருமை என்றாா்.

கடந்த இரு நாள்களுக்கு முன்னா் பிரிட்டன் சென்றிருந்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ், அங்கு ஆக்ஸ்போா்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாா். அப்போது தமிழக பள்ளிக் கல்வித் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அங்குள்ள மாணவா்கள், பேராசிரியா்களுக்கு அவா் விளக்கினாா் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com