
தஞ்சாவூர் மாவட்டம், நரசிங்கம்பேட்டை அருகே கார் லாரி மோதியதில் தம்பதியினர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (60). தொழிலதிபரான இவருக்கு கலாவதி (56) என்ற மனைவியும், மகன் ராகேஷ்(35), மருமகள் ராஜேஸ்வரி (27) ஆகியோர் உள்ளனர். சுப்பிரமணி - கலாவதி தம்பதியினருக்கு அறுபதாம் ஆண்டு திருமண விழா நடத்த அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
அதற்கு முன்னேற்பாடாக காரில் பொள்ளாச்சியில் இருந்து திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் திருக்கோவிலுக்கு குடும்பத்தாருடன் சென்று கொண்டிருந்தார்.
அப்போது தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா, திருநீலக்குடி அருகே நரசிங்கம்பேட்டை பெரியார் சிலை அருகே மயிலாடுதுறையில் இருந்து ஐந்து வேலை ஆள்களுடன் தேங்காய் லோடு ஏற்றி வந்த லாரி, வெள்ளிக்கிழமை அதிகாலை சுப்பிரமணி சென்ற கார் மீது நேருக்குநேர் மோதியது.
இதில், சம்பவ இடத்திலேயே சுப்பிரமணி மற்றும் அவரது மனைவி கலாவதி இருவரும் பரிதாபமாக பலியாகினர். அவரது மகன் மற்றும் மருமகள், காரை ஓட்டி வந்த அஸ்கர்(25) மூவரும் படுகாயமடைந்தனர்.
இது குறித்து அருகில் இருந்தவர்கள் திருநீலக்குடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் உயிரிழந்த தம்பதியினர் சடலங்களை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு ஒப்படைத்தனர்.
காயம்பட்ட ராகேஷ் தம்பதியினர் மற்றும் ஓட்டுநர் அஸ்கர் ஆகியோர் தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். மேலும் விபத்து தொடர்பாக லாரி ஓட்டுநர் தென்காசியைச் சேர்ந்த மாரிதுரை (49), சேலத்தைச் சேர்ந்த மாதேஷ் (50) ஆகியோரை கைது செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறுபதாம் கல்யாணத்துக்குச் சென்ற நிலையில் தம்பதி இருவரும் பலியான சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.