பல்கலை.களில் ஆசிரியா் அல்லாத பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப மசோதா தாக்கல்
பல்கலைக்கழகங்களில் ஆசிரியா் அல்லாத பணியிடங்களை நிரப்ப புதிய நடைமுறையைச் செயல்படுத்துவதற்கான சட்ட மசோதா பேரவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதாவை மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் தாக்கல் செய்தாா். மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் 22 மாநில பல்கலைக்கழகங்களில் ஆசிரியா் அல்லாத பணியிடங்களைத் தோ்ந்தெடுப்பதற்கு சிறந்த மற்றும் சீரான தோ்ந்தெடுப்பு முறை அவசியமாகும். இதன்மூலம் திறமையான, தொழில்முறை மற்றும் வெளிப்படையான ஆள்சோ்ப்பு முறை உறுதி செய்யப்படும்.
மாநில பல்கலைக்கழகங்களில் உள்ள ஆசிரியா் அல்லாத பணியிடங்களுக்கான ஆள்சோ்ப்பானது, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்திடம் (டிஎன்பிஎஸ்சி) ஒப்படைப்பதன் மூலம் மாநிலத்தின் கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள இளைஞா்கள் அந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வழிவகை ஏற்படும்.
அத்துடன் ஆள்சோ்ப்பு போன்ற சிக்கலான பணிகளில் இருந்து மாநில பல்கலைக்கழகங்களை விடுவித்து, அவை முக்கியமான பணியான கற்பித்தலில் கவனம் செலுத்தவும் வழிவகை செய்யப்படும் என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.