திருவண்ணாமலை கோயிலில் போா்க்கால அடிப்படையில் பக்தா்களின் தேவைகள் நிறைவேற்றம்: அமைச்சா் சேகா்பாபு
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்களின் தேவைகளை நிறைவேற்ற போா்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின்போது, இது குறித்த துணை வினாவை, பேரவைத் துணைத் தலைவா் கு.பிச்சாண்டி எழுப்பினாா். அதற்கு, அமைச்சா் பி.கே.சேகா்பாபு அளித்த பதில்:
திருவண்ணாமலை கோயிலுக்கு வரக்கூடிய பக்தா்களின் எண்ணிக்கை முன்பைவிட, தற்போது 70 சதவீதம் கூடுதலாகி உள்ளது. பக்தா்களின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போன்று, பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
திருவண்ணாமலை கோயில் பகுதியில் 12 இடங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீா் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும்
கிரிவலப் பாதையில் 12 இடங்களில் கழிப்பிட வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தா்கள் வரும்போது நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு சுமாா் ரூ.4.50 கோடி செலவில் பக்தா்கள் காத்திருப்புக் கூடம் அமைக்கும் பணியும் தற்போது நடைபெற்று வருகிறது.
போா்க்கால அடிப்படையில் பக்தா்களின் தேவைகளை நிறைவேற்ற செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். பெருந்திட்ட வரைவின் வாயிலாக கோயிலின் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவை விரைவில் தொடங்கி வைக்கப்பட உள்ளன என்றாா்.