
ஆணவக் கொலைகளைத் தடுக்க சட்டம் இயற்ற தமிழ்நாடு அரசு கொள்கை முடிவெடுத்திருப்பதை விசிக வரவேற்கிறது என அதன் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் ஆணவப் படுகொலைகளைத் தடுக்கும் நோக்கில் உரிய சட்டம் இயற்றத் தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுக்கும் என சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
"ஆணவப் படுகொலையைத் தடுக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். சாதி ஆணவக் கொலைகளை தடுக்க ஆணைய பரிந்துரைப்படி தனிச் சட்டம் இயற்றப்படும்.
ஓய்வுபெற்ற நீதிபதி கே.என். பாஷா தலைமையில் சட்டவல்லுநர்கள் கொண்ட ஆணையம் அமைக்கப்படும். காலனி என்ற சொல் நீக்கம் குறித்து அறிவித்தேன், இது சாதாரண சாதனை அல்ல. பள்ளி, கல்லூரி விடுதிகளில் சாதி பெயரே கூடாது என சமூக நீதி விடுதிகளாக பெயர் மாற்றியுள்ளோம்" என்று பேசியிருந்தார்.
இதற்கு பல்வேறு கட்சிகள் வரவேற்பு தெரிவித்து வருகின்றன.
விசிக தலைவர் தொல். திருமாவளவன் தனது எக்ஸ் பக்கத்தில், "ஆணவக்கொலைகளைத் தடுக்க சட்டம் இயற்ற தமிழ்நாடு அரசு கொள்கை முடிவெடுத்திருப்பதை விசிக வரவேற்கிறது.
நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் அமைத்து அதன் பரிந்துரைகளின் அடிப்பையில் சட்டமியற்றப்படுமென சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருப்பதை வரவேற்றுப் பாராட்டுகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.