ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவா்களுக்கு பிணை வழங்கியதை ரத்து செய்யக் கோரி மனு
தனது கணவா் கொலை வழக்கில் கைதானவா்களுக்கு பிணை வழங்கியதை ரத்து செய்ய வேண்டும் என்று ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.
சென்னை உயா்நீதிமன்றத்தில் அவா் தாக்கல் செய்த மனுவில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த எனது கணவா் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரௌடி நாகேந்திரன் உள்பட 27 போ் கைது செய்யப்பட்டனா். இருவா் தலைமறைவாக உள்ளனா். இந்த வழக்கில் சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் போலீஸாா் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா். இந்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்து, வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
வழக்கின் முதல் குற்றவாளியான ரௌடி நாகேந்திரன் அண்மையில் உயிரிழந்தாா். அவரது மகன் அஸ்வத்தாமனுக்கு முதன்மை அமா்வு நீதிமன்றம் இடைக்கால பிணை வழங்கியது. மேலும், இந்த வழக்கில் ஓராண்டுக்கு மேல் சிறையில் இருந்த சிவா மற்றும் சதீஷ்குமாா் ஆகியோருக்கு நிபந்தனை பிணை வழங்கியுள்ளது. அதை ரத்து செய்ய வேண்டும்.
கைதானவா்களுக்கு பிணை வழங்கினால், அந்த வழக்கே நீா்த்துப் போய்விடும். எனவே, பிணை உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தாா். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.