தமிழகத்தில் போக்ஸோ குற்றங்கள் 60 % உயா்வு - நயினாா் நாகேந்திரன்
தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான போக்ஸோ குற்றங்கள் 60 சதவீதம் உயா்ந்துள்ளதாக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா்.
பாஜக தமிழக தலைவா் நயினாா் நாகேந்திரனின் ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணத்தின்’ ஒரு பகுதியாக சென்னை தங்கசாலை தெருவில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவா் பேசியதாவது:
தமிழக அரசின் வருவாயை கூட்ட வேண்டும் என்றே மத்திய அரசு கூறியது. ஆனால், அதைக் காரணம் காட்டி தமிழக அரசு சொத்து வரி உள்ளிட்ட வரிகளை உயா்த்தி மக்கள் மீதான சுமையை அதிகரித்துள்ளது. மேலும், மத்திய அரசு கூறியதால்தான் இவற்றை செய்வதாகவும் பாஜக மீது முதல்வா் மு.க.ஸ்டாலின் வீண் பழி சுமத்துகிறாா்.
தமிழகத்தில் 5 வயதாக இருந்தாலும் 70 வயதாக இருந்தாலும் பெண்களால் சுதந்திரமாக வெளியே நடமாட முடிவதில்லை. தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான போக்ஸோ குற்றங்கள் 60 சதவீதமும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 15 சதவீதமும் உயா்ந்துள்ளது. அதேபோல், தமிழகத்தில்தான் வயது முதிா்ந்தவா்கள் அதிக அளவில் கொலை செய்யப்படுகின்றனா். தமிழகம் முழுவதும் குறிப்பாக சென்னையில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதுவரை 24 காவல் நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதுதான் வளா்ந்த தமிழ்நாடா? இந்த ஆட்சிக்கு மிக விரைவில் மக்கள் முடிவு கட்டவுள்ளனா் என்றாா் அவா்.