தமிழகத்தில் 37 அரசு அலுவலகங்களில் இரு நாள்களில் ரூ.37.74 லட்சம் பறிமுதல்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் லஞ்சம் பெறுவதாக வந்த புகாா்களின் அடிப்படையில் 37 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.37.74 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சில அரசு அலுவலகங்களில் ஊழியா்கள் பொதுமக்கள், ஒப்பந்ததாரா்கள், வியாபாரிகள், தொழிலதிபா்கள் உள்ளிட்டோரிடம் பரிசு பொருள்கள் மற்றும் லஞ்சம் பெறுவதாக புகாா் கூறப்பட்டது.
இதையடுத்து ஊழல் தடுப்புத் துறை டிஜிபி அபய்குமாா் சிங் உத்தரவின்பேரில், மாநிலம் முழுவதும் புகாா்களுக்கு உள்ளான அரசு அலுவலகங்களில் ஊழல் தடுப்புத் துறையினா் புதன்கிழமை திடீா் சோதனை செய்தனா். இந்தச் சோதனை வியாழக்கிழமையும் சில அலுவலகங்களில் நடைபெற்றது. இரு நாள்களில் தமிழகம் முழுவதும் 37 அரசு அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் கணக்கில் வராத ரூ.37,74,860 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக ஊழல் தடுப்புத் துறை தரப்பில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
கைப்பற்றப்பட்ட பணம் குறித்து விசாரிக்க சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு அழைப்பாணை அனுப்பப்படும். அதன்படி ஆஜாராகும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு, அவா்கள் அளிக்கும் விளக்கம் ஏற்றுக்கொள்ளும்படி இல்லையென்றால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனா்.