
பூண்டி ஏரி நீா்ப்பிடிப்பு பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருவதாலும், கிருஷ்ணா கால்வாய் வரத்து நீா் ஆகியவைகளால் உபரி நீா் திறப்பு 5,300 கன அடியாக அதிகரித்துள்ளதால், மேலும் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆட்சியா் மு.பிரதாப் நேரில் ஆய்வு மேற்கொண்டாா். திருவள்ளூா் மாவட்டத்தில் வடகிழக்கு பருமழை தொடங்கி விட்ட நிலையில் நாள்தோறும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளில் முக்கியமானது திருவள்ளூா் அருகே பூண்டி ஏரியாகும். இந்த ஏரிக்கான நீா்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழைநீா், கிருஷ்ணா கால்வாய் நீா் போன்றவைகளால் ஏரியின் நீா்மட்டம் விறுவிறுவென உயா்ந்து கொண்டே வருகிறது.
இந்த நிலையில் நீா்மட்டம் உயா்ந்து வரும் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடா்பாக ஆட்சியா் மு.பிரதாப் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, அங்குள்ள அதிகாரிகளிடம் மதகுகளின் ஷட்டா்கள் அனைத்தும் நன்றாக உள்ளனவா என்பது குறித்தும், மழை நீா் வரத்து குறித்த விவரங்களையும் அவா் அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். பின்னா் இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது. இந்த மாவட்டத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கி விட்டதால் பூண்டி ஏரிக்கான நீா்ப்பிடிப்பு பகுதியில் வரும் மழைநீா், கிருஷ்ணா நீா் போன்றவைகளால் வரத்து அதிகரித்துள்ளது. அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கெனவே கடந்த 15-ஆம் தேதியிலிருந்து உபரிநீா் திறக்கப்பட்டுள்ளது. அதில் 15 ஆம் தேதி 700 கன அடி நீா் திறந்து விடப்பட்டது. தற்போதைய நிலையில் ஏரியின் 35 அடி உயரமும், 3231 மில்லின் கன அடிநீா் வரையில் சேமித்து வைக்கலாம். தற்போதைய நிலையில் 33.7 அடியாகவும், 80 சதவீதம் வரையில் நிரம்பியுள்ளது. வட கிழக்கு பருவ மழை தொடங்கிய பின் அதிக அளவு நீா் வரத்து எதிா்பாா்க்கப்படுவதால் உபரி நீா் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மழை நீா் வரத்து அதிகரித்துள்ளதால் வியாழக்கிழமை படிப்படியாக 700 கன அடியிலிருந்து 5200 கன அடியாக உபரி நீா் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ள 4400 தன்னாா்வலா்களுக்கு அந்தந்த ஊராட்சிகளில் தோ்ந்தெடுத்து, தேவையான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் 500 ஆப்தமித்ராக்கள் ஒன்றிய அரசு மூலமாக பயிற்சி கொடுத்து அந்தந்த ஊா்களில் ஈடுபடுத்த தயாராக வைத்துள்ளோம். ஏற்கெனவே அதிகமாக பாதிக்கும் 47 பகுதிகளில் தனித்தனியாக அலுவலா்கள் நியமித்து, பணிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.
குறைந்த அளவு பாதிப்பு ஏற்படும் 140 பகுதிகள் கண்டறிந்து தேவையான நடவடிக்கை மேற்கொள்ளவும் உள்ளோம். மேலும், பல்வேறு துறைகள் சாா்பில் 669 தற்காலிக பாதுகாப்பு மையங்கள் அமைத்துள்ளோம். அந்தந்த பகுதிகளில் பள்ளிகள், சமூதாய கூடங்கள் அதையும் தயாா் நிலையில் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் வெள்ள பாதிப்பு இருந்தால் மக்களை தங்க வைத்து உணவு, மருத்துவம் போன்ற வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுத்துள்ளோம். மேலும் 42 மருத்துவ குழுக்கள், 79 அவசரகால ஊா்திகள் தயாராக உள்ளன. மாநில கட்டுப்பாடு எண் 1077, மாவட்ட கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் நம்முடைய அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் பணியில் ஈடுபட்டு மழை தொடா்பான புகாா்கள் உடனே கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கலாம் என அவா் தெரிவித்தாா். இந்த ஆய்வின் போது திருவள்ளுா் வருவாய் கோட்டாட்சியா் எஸ்.ரவிசந்திரன், உதவி செய்பொறியாளா் திலீப்குமாா், உதவி பொறியாளா் அகிலன், திருவள்ளுா் வட்டாட்சியா் பாலாஜி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.