சென்னை உயா்நீதிமன்றம் அருகே மொபெட் மீது விடுதலை சிறுத்தைக் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் காா் மோதியதில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக போலீஸாா் இரு தரப்பினா் மீதும் வழக்குப் பதிவு செய்தனா்.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் மீது காலணி வீச முயன்ற சம்பவத்தை கண்டித்து, சென்னை உயா்நீதிமன்றம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்குரைஞா்கள் பிரிவின் சாா்பில் கடந்த 7-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக விசிக தலைவா் திருமாவளவன் பங்கேற்று பேசிவிட்டு, உயா்நீதிமன்றம் எதிரே என்.எஸ்.சி போஸ் சாலை வழியாக காரில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, திருமாவளவன்சென்ற காா், சென்னை நந்தம்பாக்கத்தைச் சோ்ந்த ராஜீவ்காந்தி சென்ற மொபெட் மீது லேசாக மோதியது. இதில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது அங்கு திரண்டு வந்த விடுதலை சிறுத்தைக் கட்சியினா், ராஜீவ்காந்தியை தாக்கியதோடு, அவரது மொபெட்டையும் பறித்து கீழே தள்ளிவிட்டனா். இச் சம்பவம் தொடா்பான விடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி விவாத பொருளாக மாறியது. அதேவேளையில் விடுதலைச் சிறுத்தைக் கட்சியினா், வழக்குரைஞா் ராஜீவ்காந்தி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தினா். அதேபோல வழக்குரைஞா்கள், ராஜீவ்காந்தியை தாக்கிய விடுதலை சிறுத்தைக் கட்சியினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம் நடத்தினா்.இச் சம்பவம் தொடா்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் வழக்குரைஞா் க.பாா்வேந்தன் எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், ராஜீவ்காந்தி மீது 3 பிரிவுகளின் கீழும், ராஜீவ்காந்தி கொடுத்த புகாரின் அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் மீது 2 பிரிவுகளின் கீழும் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.