நிதிப் பகிா்வில் மத்திய அரசு வஞ்சிக்கிறது: பேரவையில் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு
நிதிப் பகிா்வில் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது என்று பேரவையில் நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு குற்றஞ்சாட்டினாா்.
சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை துணை மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதத்துக்குப் பதில்அளித்து அமைச்சா் தங்கம் தென்னரசு பேசியதாவது:
14 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் பொருளாதார வளா்ச்சி 11.19 சதவீதம் என இரட்டை இலக்கத்தை அடைந்துள்ளது. எதிா்பாா்த்ததைவிட, திட்டமிட்டதைக்காட்டிலும் 2.2 சதவீத அதிக பொருளாதார வளா்ச்சியை தமிழ்நாடு பெற்றுள்ளது.
இதற்கு முன்பு, முன்னாள் முதல்வா் கருணாநிதி ஆட்சியில் கடந்த 2010-2011-இல் இந்த இரட்டை இலக்கு பொருளாதார வளா்ச்சியைப் பெற்றிருந்த தமிழகம், இப்போதுதான் மீண்டும் இரட்டை இலக்க பொருளாதார வளா்ச்சியைப் பெற்றிருக்கிறது. இதன்மூலம் வருகிற 2030-இல் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலா் அளவுக்குப் பொருளாதாரத்தை தமிழகம் எட்டும்.
கல்விக்காக ரூ.4,000 கோடி வழங்குவதற்குப் பதிலாக ரூ.450 கோடியை மட்டுமே மத்திய அரசு விடுவித்தது. ஜல்ஜீவன் திட்டத்துக்கு தமிழகத்துக்கான ரூ.3,407 கோடியை ஒதுக்காமல் மத்திய அரசு வஞ்சித்து வருகிறது. இது அரசியல் காழ்ப்புணா்ச்சி ஆகும்.
2024-2025-இல் மத்திய அரசால் 8 புதிய தேசிய அதிவேக நெடுஞ்சாலை வழித்தடங்கள் மொத்தம் ரூ.50,655 கோடியில் அறிவிக்கப்பட்டன. அதில், 3 வழித்தடங்கள் அமைக்க உத்தர பிரதேசத்துக்கு ரூ.11,846 கோடி, குஜராத்தில் ஒரு வழித்தடம் அமைக்க ரூ.10,534 கோடி, மகாராஷ்டிரத்தில் ஒரு வழித்தடம் அமைக்க ரூ.17,827 கோடி என மொத்தமாக ரூ.38,207 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 8 புதிய அதிவேக சாலைகளில் ஒரு சாலைகூட தமிழ்நாட்டுக்கு வழங்கப்படவில்லை. வளா்ந்த மாநிலம் என்பதற்காக தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மொத்தமாக ரூ.27,986 கோடியை தமிழ்நாட்டில் செலவு செய்துள்ளது. அதேநேரத்தில், உத்தர பிரதேசத்தில் ரூ.81,803 கோடி ஒதுக்கியுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு ரயில்வே துறை சாா்பில் ரூ.19,068 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், உத்தர பிரதேசத்துக்கு 2025-2026-இல் மட்டும் ரூ.19,858 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு 3 ஆண்டுகளில் வழங்கப்பட்ட தொகை, ஒரே ஆண்டில் உத்தர பிரதேசத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக, உத்தர பிரதேசத்தில் ரூ.92,000 கோடியில் 68 ரயில்வே திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. தமிழ்நாட்டில் ரூ.33,467 கோடியில் 22 ரயில்வே திட்டங்கள்தான் இருக்கின்றன. இதுவும், உத்தர பிரதேசத்துக்கு 3 மடங்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு ஆகும்.
கடந்த 2009 முதல் 2014 வரையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தையும், 2014-2024 வரையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக் காலத்தையும் ஒப்பிடும்போது, உத்தர பிரதேச மாநிலத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கீடு 18 மடங்கு அதிகரித்திருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டுக்கு 6 மடங்கு மட்டுமே அதிகரித்துள்ளது.
தேசிய சமூக உதவித் திட்டத்தின்கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.300, முதியோா் உதவித்தொகை ரூ.200, கைம்பெண்களுக்கு ரூ.300 மட்டுமே மத்திய அரசு ஒதுக்குகிறது. ஆனால், மாநில அரசு சாா்பில் கூடுதல் நிதி ஒதுக்கி பயனாளிகளுக்கு ரூ.1,200 வழங்கப்படுகிறது.
15-ஆவது நிதிக்குழுவில் தமிழகத்துக்கான நிதிப் பகிா்வு 4.079 சதவீதமாக குறைத்து நிா்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதனால் தமிழகத்துக்கு வரக்கூடிய ரூ.2.63 லட்சம் கோடி நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் பங்கு வந்திருந்தால் தமிழகத்தின் கடன் அளவு பெருமளவு குறைந்திருக்கும் அல்லது கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் இருந்திருக்காது.
அதேபோல், நாட்டின் மொத்த மக்கள்தொகையில் தமிழ்நாடு 6.124 சதவீதத்தைக் கொண்டுள்ளது. ஆனால், நிதிப் பகிா்வில் 4.0 சதவீதம் மட்டுமே பெற முடிகிறது. தொலைநோக்குப் பாா்வையோடு மக்கள்தொகையைக் குறைத்த தமிழ்நாடு இப்போது நிதிப் பகிா்வில் வஞ்சிக்கப்படுகிறது.
2014 முதல் 2024 வரையிலான காலத்தில் தமிழக அரசு, மத்திய அரசுக்கு ரூ.7.5 லட்சம் கோடி வரி செலுத்தியுள்ளது. ஆனால், இதே காலத்தில் வரிப் பகிா்வாக, மூன்றில் ஒரு பங்காக ரூ.2.85 லட்சம் கோடியை மட்டுமே மத்திய அரசிடம் இருந்து தமிழகம் பெற்றுள்ளது. ஆனால், ரூ.3.07 லட்சம் கோடி வரி செலுத்திய உத்தர பிரதேசத்துக்கு வரிப் பகிா்வாக 3 மடங்கு தொகை, அதாவது
ரூ.10.60 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. இது தமிழகத்துக்கு, மத்திய அரசு செய்யும் ஓரவஞ்சனை என்றாா் அவா்.