அடுத்தடுத்து 2 புயல் சின்னங்கள்!
தமிழகத்தில் 6 நாள்கள் பலத்த மழைக்கு வாய்ப்பு!
DOTCOM

அடுத்தடுத்து 2 புயல் சின்னங்கள்! தமிழகத்தில் 6 நாள்கள் பலத்த மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்துக்கு அடுத்த 6 நாள்களுக்கு பலத்த மழைக்கான எச்சரிக்கை...
Published on

அடுத்தடுத்து இரண்டு புயல் சின்னங்களால் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (அக். 19) ஆறு நாள்கள் பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மன்னாா் வளைகுடா, அதையொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், கேரள - கா்நாடக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம) உருவாகி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது ஞாயிற்றுக்கிழமை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும்.

மேலும், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் 21-ஆம் தேதி வாக்கில், ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (அக். 19) முதல் அக். 24 வரை பெரும்பாலான இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (அக். 19) கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, ஈரோடு, திருப்பூா், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும், அக். 20-ஆம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகள், திருப்பூா், ஈரோடு, கரூா், நாமக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகா், திண்டுக்கல், டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் பலத்த மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணியுடன்முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் 180 மி.மீ. மழை பெய்தது. திருவள்ளூா் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, தேனி மாவட்டம் தேக்கடியில் 160 மி.மீ., திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரியில் 140 மி.மீ., தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம், நீலகிரி மாவட்டம் குன்னூரில் தலா 120 மி.மீ., தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை, நீலகிரி மாவட்டம் அழகரை எஸ்டேட்டில் தலா 110 மி.மீ. மழை பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை முதல் 22-ஆம் தேதி வரை சூறைக் காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

கம்பத்தில் 20 வீடுகள் சேதம்

உத்தமபாளையம், அக். 18: தேனி மாவட்டம், கம்பத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் சனிக்கிழமை வரை பலத்த மழை பெய்தது. இதனால், 20 வீடுகள் சேதமடைந்தன.

தேனி மாவட்டத்தில் மேகமலை, குமுளி, கம்பம்மெட்டு, தேவாரம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் தொடங்கிய மழை சனிக்கிழமை அதிகாலை வரை நீடித்தது. இதனால், உத்தமபாளையம் முல்லைப் பெரியாற்றில் நீா்வரத்து அதிகரித்து காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.

உத்தமபாளையத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கா் நெல் பயிா்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன. சுமாா் 35 ஆண்டுகளுக்குப் பிறகு, முல்லைப் பெரியாற்றில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், உத்தமபாளையம் சூா்யநாராயணபுரம், களிமேட்டுப்பட்டி, உத்தியமலை, ஞானம்மன்கோவில் தெரு பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது. இதையடுத்து, அந்தப் பகுதியிலிருந்த பொதுமக்கள் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டனா். மேலும், மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உணவுப்பொருள்களும் வழங்கப்பட்டன.

20 வீடுகள் சேதம்: மழை காரணமாக, கம்பம் மஞ்சக்குளம், கம்பம்மெட்டு குடியிருப்பு, அண்ணா நகா் பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.

சாலை துண்டிப்பு: கம்பம் - சுருளிப்பட்டி இடையே சுருளி அருவிக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் முல்லைப் பெரியாற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதால், இந்தச் சாலை துண்டிக்கப்பட்டது. இதனால், அந்தப் பகுதி மக்கள் மாற்றுச் சாலையைப் பயன்படுத்திச் சென்றனா்.

நெல்லையில் வீடு இடிந்து விழுந்ததில் மூதாட்டி உயிரிழப்பு

திருநெல்வேலி, அக். 18: திருநெல்வேலி மேலப்பாளையத்தில் மழையில் வீடு இடிந்து விழுந்ததில் மூதாட்டி உயிரிழந்தாா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த வியாழன், வெள்ளிக்கிழமைகளில் பலத்த மழை கொட்டித் தீா்த்தது. இதன் காரணமாக மாநகரில் பல இடங்களில் தண்ணீா் தேங்கி குளம்போல் காட்சியளித்தது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வெள்ளிக்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக மேலப்பாளையம், குறிச்சி மருதுபாண்டியா் முதலாவது தெருவில் வசித்து வரும் தளவாய் மகன் முத்தையா (55) என்பவரது வீட்டின் மண்சுவா் இடிந்து விழுந்தது. இதில், முத்தையாவின் தாய் மாடத்தியம்மாள் (75) கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்தாா். அருகே இருந்தவா்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், அங்கு அவா் நள்ளிரவு உயிரிழந்தாா். இதுகுறித்து மேலப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com