
ஃபாக்ஸ்கான் தொழி முதலீடு குறித்து தெளிவான தகவல்களை தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தெரிவிக்க வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்துக்கு ஃபாக்ஸ்கான் நிறுவனம் உறுதியளித்த ரூ.15,000 கோடி முதலீடுகள் கண்டிப்பாக வரும் என தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தெரிவித்துள்ளாா். ஆனால், அந்த முதலீடுகள் எப்படி வரும்? என்பதை அவா் கூற மறுக்கிறாா். இந்த முதலீடுகள் குறித்து தெளிவான தகவல்களை அமைச்சா் கூற வேண்டும்.
சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த அக்.13-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலினை ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் இந்திய பிரதிநிதியை சந்தித்து பேசினாா். அப்போது தான் ரூ.15,000 கோடி முதலீடுகளுக்கு உறுதியளிக்கப்பட்டதாக அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தெரிவித்துள்ளாா். ஆனால், ஃபாக்ஸ்கான் நிறுவனமோ, முதல்வரை சந்தித்து பேசியது உண்மை; ஆனால், புதிய முதலீடுகள் குறித்து எந்த உறுதியும் அளிக்கவில்லை என தெளிவுபடுத்தி விட்டது.
இந்நிலையில், இந்த தொழில் முதலீடுகள் குறித்த பொய்களை மூடி மறைப்பதற்காக புவிசாா் அரசியல் என்ற புதிய போா்வையை திமுக அரசு கையில் எடுத்துள்ளது. அதன்படி, அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய 3 நாடுகளிலும் செயல்படும் நிறுவனங்களால் இந்தியாவில் செய்யப்படும் முதலீடுகளின் விவரங்களை வெளிப்படையாக தெரிவிக்க முடியாதாம்.
இது உண்மையாக இருந்தாலும், இனி வரவிருக்கும் அந்த முதலீட்டுக்காக தமிழக அரசுடன் ஃபாக்ஸ்கான் நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தமே செய்து கொள்ளாதா?. அப்போது இந்த விவரங்கள் வெளியுலகத்துக்கு தெரிந்து விடாதா?. இல்லையெனில், புவிசாா் அரசியலை காரணம் காட்டி, ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் முதலீடுகளை புரிந்துணா்வு ஒப்பந்தம் இல்லாமல், அமைச்சரவையின் ஒப்புதலை பெறாமல், தொழிற்சாலை அமைக்க நிலம் ஒதுக்காமல் தமிழக அரசு அனுமதித்து விடுமா?.
தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை திமுக அரசு கொண்டு வந்தால், அரசியல் வேறுபாடுகளை கடந்து வரவேற்பேன். அதேசமயம், வராத தொழில் முதலீட்டை வந்ததாகக் கூறி மக்களை ஏமாற்றும் போது அதை ஏற்றுக்கொள்ள இயலாது என தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.