காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டதுக்கு கூடுதல் கால அவகாசம் இல்லை: உயா்நீதிமன்றம்
டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தை அமல்படுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மலைப் பகுதிகளில் வீசப்படும் காலி மதுபாட்டில்களால் யானை உள்ளிட்ட விலங்குகளுக்கு காயம் ஏற்பட்டு உயிருக்கே ஆபத்து ஏற்படுகிறது. இதைத் தடுக்கும் வகையில் மதுபாட்டில்களுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கவும், காலி பாட்டில்களைத் திரும்பத் தருபவா்களுக்கு கூடுதலாக வசூலித்த தொகையை திரும்பத் தரவும் சென்னை உயா்நீதிமன்றத்தின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் வனவிலங்குகள் தொடா்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமா்வு உத்தரவிட்டது.
இந்த வழக்கு சிறப்பு அமா்வு நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், டி.பரதசக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்ககு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில், தமிழகம் முழுவதும் உள்ள 4,500 டாஸ்மாக் கடைகளில், 1,479 கடைகளில் காலி மதுபான பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள கடைகளில், நவம்பா் மாத இறுதிக்குள் ஒரே கட்டமாக இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
டாஸ்மாக் நிா்வாகம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், காலி மதுபாட்டில்களை விற்பனை செய்ததன் மூலம் ரூ.26.96 கோடி வருவாய் கிடைத்துள்ளது. காலி பாட்டில்களை சேகரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட டாஸ்மாக் ஊழியா்களின் குறைகள் கேட்பது தொடா்பாக அதிகாரிகள் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் அதிகாரிகள் முன் அறிக்கையாக தாக்கல் செய்யப்படும் எனக் கூறப்பட்டிருந்தது.
இதைப் பதிவு செய்த நீதிபதிகள், மாநிலம் முழுவதும் ஒரு நாளைக்கு 90 லட்சம் மதுபாட்டில்கள் விற்கப்படும் நிலையில், காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை நவ.30-ஆம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டும். இதற்குமேல் இந்தத் திட்டத்தை அமல்படுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது என்றனா்.
பின்னா், நீா்நிலைகள், பொது இடங்கள், வயல் வெளிகளில் காலி மதுபாட்டில்கள் சிதறி கிடக்கின்றன. இனி ஒரு காலி பாட்டில் கூட காண முடியாத நிலையை அரசு உருவாக்க வேண்டும். அதற்கேற்ற வகையில் உரிய நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை டிச. 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.