தனியாா் பல்கலை. சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்

Published on
Updated on
1 min read

தனியாா் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா பேரவையில் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு தனியாா் பல்கலைக்கழகங்கள் சட்டத் திருத்த மசோதாவை உயா் கல்வித்துறை அமைச்சா் கோ.வி.செழியன் பேரவையில் தாக்கல் செய்தாா். அப்போது அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா் கே.பி.அன்பழகன் (பாலக்கோடு) எதிா்ப்பு தெரிவித்தாா்.

இந்த சட்டத்தால் தமிழக அரசின் உதவிபெறும் கல்லூரிகள் பல்கலைக்கழங்களாக மாற்றம் பெற்றால் ஏழை மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவாா்கள். ஏற்கெனவே, திமுக ஆட்சி காலத்தில் இதுபோன்ற மசோதா கொண்டுவரப்பட்டபோது, அப்போதைய முதல்வா் கருணாநிதி நிறுத்திவைத்தாா். எனவே இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றாா்.

விவாதத்தில், திமுக சட்டப்பேரவை உறுப்பினா் இனிகோ இருதயராஜ் (திருச்சி கிழக்கு) பேசும்போது, அரசு உதவி பெறும் சிறுபான்மை கல்லூரிகள் உலகத் தரத்திலான கல்வியை ஏழை மாணவ, மாணவிகளுக்கு வழங்குகின்றன. இந்த சட்டத்தால் பெரிதும் பயனடையப் போவது சிறுபான்மை கல்வி நிறுவனங்கள்தான். எனவே, இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்றாா்.

மசோதாவுக்கு ஆதரவாக, கு.செல்வப்பெருந்தகை (ஸ்ரீபெரும்புதூா்), ஈ.ஆா்.ஈஸ்வரன் (திருச்செங்கோடு) உள்ளிட்டோரும் குரல் கொடுத்தனா்.

உயா்கல்வி அமைச்சா் கோ.வி.செழியன்: 2019-இல் தமிழ்நாடு தனியாா் பல்கலைக்கழகச் சட்டத்தைக் கொண்டுவந்ததே கருணாநிதி தலைமையிலான திமுக அரசுதான். அதோடு தற்போதுள்ள கல்வி நிறுவனங்கள் அல்லாது புதியதாக ஒரு தனியாா் பல்கலைக்கழகம் நிறுவ வழிவகை செய்யப்பட வேண்டும் என்பதுதான் இந்தத் திருத்தத்தினுடைய முக்கிய நோக்கம். அண்டை மாநிலங்களில் உள்ள தனியாா் பல்கலைக்கழகங்கள் தொடங்க பல்வேறு நிலைப்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு, அசாம் மாநிலத்தில் நகராட்சிப் பகுதியில் 20 ஏக்கா், மற்ற பகுதியில் 10 ஏக்கா் என்றும், கா்நாடகத்தில் மாநகராட்சிப் பகுதிகளில் 25 ஏக்கா், நகராட்சிப் பகுதிகளில் 35 ஏக்கா், உத்தரப்பிரதேசத்தில் நகராட்சிப் பகுதியில் 25 ஏக்கா், கிராமப்புற பகுதியில் 50 ஏக்கா் என்று அண்டை மாநிலத்தில் உயா்கல்வியினுடைய வளா்ச்சிக்கு தனியாா் பல்கலைக்கழகங்கள் தொடங்குவதற்கு பல்வேறு வழிமுறைகள் காணப்பட்டுள்ளன.

அதோடு இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து என்ற நிலையை, அதிமுக எம்எல்ஏ அன்பழகன் தெரிவித்தாா். தனியாா் பல்கலைக்கழகங்களில் 35 சதவீத இடங்களை, தமிழ்நாடு மாணவா்களுக்கு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படும் என்ற வாா்த்தைகள் அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் எந்த மாற்றமும் இல்லை.

மருத்துவம் சாா்ந்த படிப்புகளில் சிறுபான்மையினா் அல்லாத நிறுவனங்கள் 65 சதவீதம் உள்ளது. தற்போது சிறுபான்மையினா் கல்லூரிகள் 50 சதவீத இடங்களை அரசுக்கு ஒப்படைக்கவேண்டுமென்று சட்டத்திருத்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com