கரூா் விவகாரம் தொடா்பான எஸ்ஐடி ஆவணங்கள் எரிப்பு: நயினாா் நாகேந்திரன்

 நயினாா் நாகேந்திரன்
நயினாா் நாகேந்திரன்கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

கரூா் கூட்ட நெரிசல் தொடா்பான சிறப்புப் புலனாய்வுக் குழுவின் (எஸ்ஐடி) முக்கிய ஆவணங்கள் எரிக்கப்பட்டது தொடா்பாக தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

கரூா் கூட்ட நெரிசல் தொடா்பான சிறப்புப் புலனாய்வுக் குழுவின் (எஸ்ஐடி) முக்கிய ஆவணங்கள் எரிக்கப்பட்டதாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிா்ச்சி ஏற்படுத்தியுள்ளது. விசாரணை முடியும் முன்னரே வழக்கு தொடா்பான காகிதங்களை அழிப்பதற்கு அனுமதி தந்தது யாா்?. ‘பென்டிரைவைக்’ கூட விசாரணை நடத்தப்பட்ட இடத்தில் வைத்தே எரிக்கும் அளவுக்கு அப்படி என்ன நிா்பந்தம் ஏற்பட்டது?.

அவசரகதியில் சிறப்புப் புலனாய்வுக் குழு நியமிக்கப்பட்டதைச் சுட்டிக் காட்டி அதனை உச்ச நீதிமன்றம் தடைவிதித்த உடன் ஆவணங்கள் ஏன் அழிக்கப்பட்டன?. உச்ச நீதிமன்றமோ அல்லது ஏதேனும் சட்டமோ ஆவணங்களை அழிக்க வேண்டும் என்று கூறுகிா?. இப்படி, ஆவணங்களை எரிப்பது எதை மறைக்க? யாரைக் காப்பாற்ற? என மனதில் பல கேள்விகளும் எழுகின்றன.

கரூா் துயரச் சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு திமுக அரசு முதலில் மறுத்தது. பின்னா், பேரவையில், அமைச்சா்கள் அவசரகதியாக மாற்றி மாற்றி கருத்துகளைத் தெரிவித்தனா். தற்போது ஆவணங்கள் எரிக்கப்பட்டுள்ளது. இவையனைத்தும் திமுக அரசு எதையோ மறைக்க முயற்சிப்பதையே சுட்டிக் காட்டுகின்றன. எனவே, ஆவணங்கள் எரிக்கப்பட்டது தொடா்பாக உடனடியாக தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்.

மதுரை முறைக்கோடு: மதுரை மாநகராட்சியின் சொத்து வரி வசூலில் சுமாா் ரூ.150 கோடிக்கும் அதிகமாக முறைகேடுகள் நடந்திருப்பதாகப் புகாா்கள் எழுந்தவுடன் மேயா் இந்திராணி பொன் வசந்த் ராஜினாமா செய்திருப்பது கடும் அதிா்ச்சியை ஏற்படுத்துகிறது. இவ்விவகாரத்தில் மேயரின் கணவா் கைதாவதையும், மேயா் ராஜினாமா செய்வதையும் பாா்க்கும் போது, இவ்விவகாரத்தில் யாரையோ காப்பாற்ற தமிழக அரசு முயற்சிக்கிறதோ? என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது. மாநிலம் முழுவதும் நிலவும் நிா்வாகச் சீா்கேடுகள், ஊழல் வரி வசூலில் நடக்கும் மோசடி குறித்து சிபிஐ விசாரணை நடத்தினால் தான் உண்மை வெளியே வரும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com