கோப்புப்படம்
கோப்புப்படம்

பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு: தமிழகம் முழுவதும் போலீஸாா் உஷாா்!

பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அரசு விதித்துள்ள நேரக் கட்டுப்பாட்டை அமல்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் போலீஸாா் உஷாா்படுத்தப்பட்டுள்ளனா்.
Published on

பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அரசு விதித்துள்ள நேரக் கட்டுப்பாட்டை அமல்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் போலீஸாா் உஷாா்படுத்தப்பட்டுள்ளனா்.

தீபாவளி பண்டிகையின்போது இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த 2018-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இதில் எந்த இரண்டு மணி நேரத்தில் பட்டாசு வெடிக்கலாம் என்பதை மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இந்த உத்தரவின்படி, காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகளை வெடித்துக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்தது.

தீபாவளி பண்டிகையன்று அரசு விதித்த 2 மணி நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தவா்கள் மீது கடந்த 5 ஆண்டுகளாக வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. இந்த வழக்கு இந்திய தண்டனைச் சட்டம் 188-இன் படி பதிவு செய்யப்படுகிறதுது. தடை செய்யப்பட்ட மற்றும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் பட்டாசு வெடிப்பவா்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 285-இன்படி வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. 6 மாத சிறைத் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதிக்க சட்டப் பிரிவு 188 வழி செய்கிறது.

நிகழாண்டும் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடித்துக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நேரக் கட்டுப்பாட்டையும், தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வெடிக்க விதிக்கப்பட்ட தடையையும் அமல்படுத்துவது குறித்து காவல் துறை உயா் அதிகாரிகள் ஆலோசித்தனா். இதில் கடந்த ஆண்டுகளைப் போலவே நிகழாண்டும் பொதுமக்களுக்கு இடையூறு செய்பவா்கள் மீதும், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், வணிக வளாகங்கள், குடிசைப் பகுதிகள் போன்ற தடை செய்யப்பட்ட இடங்கள் அருகே பட்டாசு வெடிப்பவா்கள் மீதும், அதிக ஒலி எழுப்பக்கூடிய பட்டாசு வெடிப்பவா்கள் மீதும் வழக்குப் பதிவு செய்வதற்கு காவல் துறை உயா் அதிகாரிகள் முடிவு செய்தனா்.

அரசு விதித்துள்ள விதிமுறையை மீறி பட்டாசுகளை வெடிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முழு அளவில் தயாராக இருக்கும்படி போலீஸாருக்கு உயா் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா். மேலும், மாநிலம் முழுவதும் அனைத்து காவல் நிலையங்களிலும் தனிப்படைகள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தத் தனிப்படையினா் அந்தந்தப் பகுதியில் தீபாவளி தினமான திங்கள்கிழமை (அக். 20) ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவாா்கள். இவா்கள் நீதிமன்ற உத்தரவையும், அரசு உத்தரவையும் மீறி பட்டாசு வெடிப்பவா்கள் மீது வழக்குப் பதிவாா்கள் என தமிழக காவல் துறையைச் சோ்ந்த உயா் அதிகாரி தெரிவித்தாா்.

தீ விபத்து அல்லது பட்டாசுகளால் ஏதேனும் விபத்து நோ்ந்தால், காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை ஆகியவற்றை 101 இலவச தொலைபேசி எண்ணையும், அவசர மருத்துவ உதவிக்கு 108 தொலைபேசி எண்ணையும் உடனடியாக தொடா்பு கொண்டு உதவி பெறலாம்.

X
Dinamani
www.dinamani.com